கருணாஸ் சர்ச்சை பேச்சு: சட்டப்படியான நடவடிக்கையே….! ஓபிஎஸ்

--

தேனி:

டிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு விவகாரத்தில்… சட்டப்படியே  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி அருகே உள்ள சுருளி அருவி சாரல் விழா இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள வந்த துணைமுதல்வர் ஓபிஎஸ் வரும் வழியில் , எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று சமுதாய அமைப்பினர்  கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அப்புறப்படுத்திய பிறகு அந்த வழியாக ஓபிஎஸ் கார் சென்றது.

இந்த நிலையில், உத்தமபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கருணாஸ் கைது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், எந்தவொரு தனி நபரும் எந்தவொரு சமுதாயத்தைப் பற்றியும் இழிவாக பேசக்கூடாது. அவ்வாறு பேசுபவர்கள்  யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும என்றார்.

இந்த விஷயத்தில் கருணாசுக்கு பின்புலமாக டிடிவி தினகரன் இருப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு… டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதில் இருந்தே அவரது குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

எச். ராஜா கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர் செல்வம், ஆதாரம் கிடைத்தால் கைது செய்யப்படுவார் என்று பதிலளித்தார்.

இந்த விழாவில் ஓபிஎஸ் உடன்   அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இவ்விழாவை ஒட்டி, தோட்டக்கலை சார்பில் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட பாண்டா கரடி, கொக்கு, பழத்தில் பொறிக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா, பென்னிக்குவிக் ஆகியோரின் உருவங்கள், வனத்துறை சார்பில் நடத்தப்படும் கண்காட்சி போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். சாரல் விழாவில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.