டில்லி:

பிரபல சமூக வலைதளங்களுல் ஒன்றான, வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான  தகவல்கள் பகிரப்பட்டால் அவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்து உள்ளது.

சமீப காலமாக வாட்ஸ்அப்பில் தரக்குறைவான மற்றும் , வெறுப்புணர்வு மற்றும் கலவரத்தை தூண்டக்கூடிய தவறான பதிவுகள் ஏராளமாக வருகின்றன. இதன் காரணமாக தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழுகின்றன.

இதன் காரணமாக உலக நாடுகள் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை  கொண்டுவர அறிவுறுத்தி வருகின்றன. இதுபோன்ற தரக்குறைவான பதிவுகளின் தொடக்கப் புள்ளியை கண்டு பிடிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தை இந்திய அரசு ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது.  அதைத்தொடர்ந்து, சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில், ஒரு தகவலை  5 பேருக்கு மேல் ஒரு செய்தியை ஃபார்வர்டு செய்ய முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்தியாவில் 200 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அவர்களை சென்றடையும் வகையில்,  நடந்துமுடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் வாக்காளர் களைக் கவர வாட்ஸ்அப் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாட்ஸ்அப் குளோன் மற்றும்  தேர்டு பார்ட்டி சாஃப்ட்வேர் மூலமாக இந்திய டிஜிட்டல் சந்தை யாளர்களும் அரசியல்வாதிகளும் தவறான செய்திகளைப் பயனாளர்களுக்கு மொத்தமாக அனுப்பியுள்ளனர்.

ஸ்பேம் வாட்ஸ்அப்பின் ஒரு முக்கியப் பிரச்னை. குறிப்பாக, இதனைப் பயன்படுத்தி, முறைகேடு கள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வேண்டாத செய்திகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் உலக அளவில் இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபட்ட ஏறக்குறைய 20 லட்சம் பயனர் எண்களை ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய இந்திய தொலைதொடர்பு துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி ஆஷிஷ் ஜோஷி  “தரக்குறைவான, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, மோசமான மற்றும் கொலை மிரட்டல் போன்ற வாட்ஸ்அப் பதிவுகள் யாருக்காவது வந்தால், அதன் திரைப்பதிவையும் (ஸ்கிரீன் ஷாட்) பதிவை அனுப்பிய நபரின் மொபைல் எண்ணையும் mailto: ccaddn-dot@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

ஆட்சேபகரமான, தரக்குறைவான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை கொண்ட பதிவுகளை அனுப்பும் பயனரின் எண்களை தொடர்புடைய சேவை நிறுவனத்திற்கு அரசு நிறுவனம் அனுப்பி வைத்து அந்த எண்ணை முடக்கும்படி கேட்டுக்கொள்ளும்.

சில வாட்ஸ்அப் பதிவர்கள், வைஃபை இணைப்பு மூலமாகவும் அனுப்பக்கூடும். வைஃபை இணைப்பும் தொலைதொடர்பு சேவை நிறுவனம் அல்லது இணைய சேவை நிறுவனம் மூலமே வழங்கப்படுவதால், அந்நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட அந்த எண் முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனைச் செய்வபவர்களை வாட்ஸ்அப் நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. ‘வாட்ஸ்அப்பை தவறாகப் பயன்படுத்தினால், பொதுமக்கள் சொல்லும் புகாரைப் பொறுத்து, சட்டரீதியாக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்’ எனப் பயனாளர்களை எச்சரித்துள்ளது.