புதுடெல்லி: பா.ஜ. ஆதரவு வலதுசாரி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீதும், அவரின் சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும், பொய்கள், தவறான தகவல், அவதூறு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றங்களை சுமத்தி, பாலிவுட் தயாரிப்பாளர் சந்தீப் சிங் சார்பில் ஒரு நீண்ட வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சந்தீப் சிங் சார்பாக அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் குமார், அக்டோபர் 14ம் தேதி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரின் குழுவினர், அவதூறு பரப்பியதாகவும், துன்புறுத்தியதாகவும், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் பதியப்பட்டுள்ளது.
தனது வக்கீல் நோட்டீஸில் ரூ.200 கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் சந்தீப் சிங்.
மொத்தம் 38 பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் சங்கங்கள், ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் டைம்ஸ் நவ் சேனலுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதையடுத்து, மற்றொரு தயாரிப்பாளர் சந்தீப் சிங்கும் இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது, ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. தற்போது, பாலிவுட் தயாரிப்பாளர் உலகமும் அவருக்கெதிராக திரும்பியிருப்பதானது, அர்னாப்பை அதிக நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
அவருக்கு ஆதரவாக ஆளும் மோடி அரசு உதவிக்கரம் நீட்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.