எஸ்.பி.பிக்கு வக்கீல் நோட்டீஸ்!: இளையராஜா தரப்பு விளக்கம்

ஸ்.பி.பி.க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதை மக்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று இளையராஜா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது திரையுலக பயணத்தைத் துவங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து உலகமெங்கும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் அவரது இசை நிகழ்ச்சி நடந்துவருகிறது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பி., பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து எஸ்.பி.பி., “எனக்கு சட்ட விதிகள் தெரியாது. ஆனாலும் இனி இளையராஜா இசை அமைத்த திரைப்பாடல்களை பாடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் நடவடிக்கையை பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலரும் கடுமயைக விமர்சித்து வருகிறார்கள். ஆகப்பெரும்பாலோர் எஸ்.பி.பிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்   இளையராஜா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப்குமார் , ” “எஸ்.பி. பிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டதை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இது வழக்கமான நடவடிக்கை தான். இளையராஜாவின் பாடல்களை, உரிய அனுமதி பெற்று, ராயல்டி கொடுத்து பயன்படுத்திக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

சாதாரணமாக மேடைக் கச்சேரிகள் செய்பவர்களிடமிருந்து ராயல்டி எதிர்பார்ப்பதில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.