திருப்பூர் ஆசிரியர்களுக்கு இதிகாசங்கள் குறித்து பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் அதிருப்தி

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இதிகாசங்கள் குறித்து வரலாற்று பயிற்சி பட்டறை என்ற பெயரில் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சிலர், அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை தொடர்ந்து,   திருப்பூர்  மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதிகாச சங்காலன சமிதி என்ற அமைப்பும் இணைந்து   நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு `வரலாற்று அறிவியல் பயிற்சிப் பட்டறை’ என்ற வகுப்பு நடைபெற்றது.

இந்த வகுப்பில் ஆசிரியர்களுக்கு  ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களைப் பற்றிக் கூறியும், அவை சார்ந்த கருத்துகளை விவரித்தும் இதிகாச சங்காலன சமிதியினர் உரையாற்றினார்கள். இது சில ஆசிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

கல்வி தொடர்பான கற்பித்தல் குறித்த பயிற்சி வகுப்பாபு என்று கலந்துகொண்டால், இந்துத்துவா கருத்துக்கள் குறித்து பேசுகிறார்கள் என்று குரல் எழுப்பினர். இந்தப் பயிற்சி வகுப்பால் ஆசிரியர்களுக்கோ எங்களின் வழியாக மாணவர்களுக்கோ எந்தவித பயனும் இல்லை என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி, “நமது நாட்டின் பாரம்பரியம், பண்பாடு குறித்து பெரும்பாலோருக்கு தெரியவில்லை. இதன் காரணமாக நமது நாட்டின்  பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் பற்றி ஆசிரியர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்…  நமது நாட்டின் பண்பாடு குறித்து  பள்ளி மாணவ மாணவிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்  இந்தப் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்யப்பட்டது.

ராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல, பொதுவான நமது பண்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கல்வி அலுவலகர்,  நம்முடைய வேர்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்… என்றும் கூறினார்.