லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இணை, லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது. இந்தப் படத்தை அவரே தயாரிக்கவுள்ளார்.

அவருக்கு புதுமுக நாயகி கீத்திகா திவாரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் மற்றொரு பிரபல நாயகியும் நடிக்கவுள்ளார் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் மற்றும் எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதற்கான பாடல் பதிவு அனைத்தையும் ஹாரிஸ் ஜெயராஜ் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் படத்தின் பூஜை நேற்று (டிசம்பர் 1) சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.