பிஞ்சுக்குரலாய் சுருங்கிய இசைப் பேரருவி

சிறப்புக்கட்டுரை:  ஏழுமலை வெங்கடேசன்

மேலும் ஒரு பொக்கிஷத்தை இழந்திருக்கிறது தமிழ் சினிமா உலகம். பழம்பெரும் பின்னணி பாடகி எம்எஸ் ராஜேஸ்வரி 86 வயதில் காலமாகியுள்ளார்.

அவரைப்பற்றி இப்போதைய தலைமுறைக்கு சொன்னால் உலகநாயகன் கமலஹாசனுக்கு முதன் முதலில் திரையில் பாடிய பின்னணி குரல் என்றால்தான் புரியவரும்

1960ல் கமல் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமான ஏவிஎம் நிறுவனத்தின் களத்தூர் கண்ணம்மாவில், ராஜேஸ்வரி பாடிய ‘’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..’’ என்ற பாடல் அவ்வளவு பிரபலமானது. டி.ஆர்.சுதர்சனம் இசையில் உருவான அந்த பாடல் இன்றைக்கும் கமலின் திரைப்பட வரலாற்றில் பொக்கிஷம் போன்ற ஒரு பகுதி..

இதே ஏவிஎம்-டி.ஆர்.சுதர்சனம் காம்பினேஷனில் உருவாகி நடிகர் திலகம் என்ற மாபெரும் ஜாம்ப வான் அறிமுகமான1952 ஆண்டு பராசக்தி படத்தி லும் ராஜேஸ்வரியின் பங்களிப்பு அசாத்தியமானது. ராப் ஸ்டைலில் அவர் ஜெட் வேகத்தில் பாடிய ‘’ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்’’ பாடல்.. இப்போது கேட்டாலும், 66 ஆண்டுகளுக்கு முன்பே அப்படி யொரு வேகமா என ராஜேஸ்வரியின் குரல் வியப்பையே ஏற்படுத்தும்.

சிறுமியாய் பாட ஆரம்பித்த ராஜேஸ்வரிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, 1941 ஆம் ஆண்டு வெளியான விஜயதசமி படத்தில் என்று அவர் மகன் ராஜ்வெங்கடேஷ் சொல்லும் தகவல்..

1940-களில் பாட ஆரம்பித்த ராஜேஸ்வரிக்கு, 1990ல் துர்கா படத்திற்காக சிறுமி ஷாமிலிக்கு, ‘’பாப்பா பாடும் பாட்டு’’ என்று சங்கர் கணேஷ் இசையில் மாஸ் ஹிட் பாடலை கொடுக்குமளவுக்கு குரல் வளம், தொடர்ந்து அமோகமாகவே இருந்தது. 90களில் தொடர்ந்து ராஜேஸ்வரிக்கு வாய்ப்பு கொடுத்து வந்தது இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடி மட்டுமே.

இதே சங்கர்-கணேஷ் இசையில் வெளியான எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன் படத்தில், தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்று எம்எஸ் ராஜேஸ்வரியின் குரல் குழந்தைகளுக்காக திரையில் ஒலித்தபோது அவ்வளவு பரிதாபம் காட்சியில் மேலோங்கும்

ராஜேஸ்வரியை பொருத்தவரை மிகப்பெரிய உயர்ந்த இடத்தை அடைந்திருக்கவேண்டிய அவர், அந்த இடத்தை அடையவில்லை என்றே சொல்லலாம்.

கமல் நடித்த நாயகன் (1987) படத்தில் ‘’நான் சிரித்தால் தீபாவளி’’ என்ற பாடல் அவ்வளவு ஹிட்.. ஆனால் பாடிய ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து சரியான வாய்ப்புகள் அமையாமல் போய்விட்டது.

குழந்தைப்பாடகி என்று என்றைக்கு முத்திரை விழுந்ததோ அன்றைக்கு அவர் இசைப்பயணம் குறுகிய வட்டத்தில் விழுந்துபோனது. காரணம், பி.சுசிலா ஜானகி போன்றோர் வருவதற்கு முன்பே பி.லீலா, ஜிக்கி, ஜமுனா ராணி போன்ற ஜாம்பவான் பாடகிகளுடன் சரிக்கு சமமாய் நின்று வெற்றி கொடி நாட்டியவர் எம்எஸ் ராஜேஸ்வரி.

எத்தனை படங்களில் எவ்வளவு நாயகிகளுக்காக எவ்வளவு மெஹா ஹிட் பாடல்கள் !!

ஏவிஎம்மின்  நாம் இருவர்(1947) படத்தில் நாட்டியத்தாரகை குமாரி கமலாவுக்காக பாடிய ஆஹா காந்தி மகான் பாடல்… அவருடையது குரல் அல்ல புல்லாங்குழல் என்றே சொல்லலாம். 1949ல் வைஜெயந்திமாலா அறிமுகமான ஏவிஎம்மின் வாழ்க்கை படத்தில், ‘’எண்ணி எண்ணி பார்க்கும் மனம் இன்பம் கொண்டாடுதே.. என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே’’ என்ற பாடல், ‘’ உன்னை கண் ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்.. ட்டடாடா டடடா டடடா…’’ பாடல் ஆகிய இரண்டும் அப்போதைய மக்கள் மத்தியில் ரிபீட் மோடிலேயே இருந்த டாப் லெவல் ரகங்கள்.

அறிஞர் அண்ணா கதை எழுதிய ஓர் இரவு (1951) படத்தில் ‘’வசந்த முல்லையும் மல்லிகையும்’’ என ராஜேஸ்வரி பாடிய பாடலும் திரும்ப திரும்ப ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்த அற்புதமான பாடலே.. பத்மினியின் சகோதரி லலிதாவின் கவர்ச்சிகரமான முகபாவத்துடன் கூடிய அபிநயமும் இதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

1954ல் சிவாஜியின் தூக்குதூக்கி படத்தில் டிஎம் சௌந்தர்ராஜன் விஸ்வரூபம் எடுக்கிறார். அதில் ‘’கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்’’ என்ற செம ஹிட்டான டூயட்.. டிஎம்எஸ்சோடு கலந்து கட்டி பின்னி பெடலெடுத்திருப்பார் எம்எஸ் ராஜேஸ்வரி.

அப்படியே டூயட்டுகளில் மேலேமேலே போயிருக்கவேண்டியவருக்கு 1955 வருடத்திய டவுன் பஸ் படம் சாபம் என்றே சொல்லலாம்.. ‘’பொன்னான வாழ்வு மண்ணாகி போனால்’’ என்ற அருமையான பாடல்… திருச்சி லோக நாதன், ராதா ஜெயலட்சுமி ஆகியோருடன் ராஜேஸ்வரி பாடியது. சோகமான பாட்டென்றாலும் திரையரங்கையே தாளம்போட வைக்கும். இந்த பாடல் ராஜேஸ்வரியை எங்கோ கொண்டுபோனது…

ஆனால் அதைவிட பல மடங்கு உயரத்தில் கொண்டுபோய் போட்டது, அதே படத்தில் ’’சிட்டுக்குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா என்னை விட்டு பிரிஞ்சிபோன கணவன் வீடு திரும்பல’’ என பிஞ்சுக்குரலில் அஞ்சலி தேவிக்காக ராஜேஸ்வரி பாடிய பாடல்.. அந்தக்காலத்தில் மேடைக்கச்சேரி, பள்ளிக்கலை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தவறாமல் ஒலித்த பாடல் அது..

கதாநாயகிகளுக்காக சோலோவாகவும் டூயட்டாகவும் பாடித்தள்ளிய ராஜேஸ்வரி, பிஞ்சுக்குரலில் பாடும் குழந்தைப்பாடகியாக முத்திரை குத்தப்பட்டார்.

மகாதேவி (1957) படத்தில் ‘’காக்கா காக்கா மை கொண்டா’’, கைதி கண்ணாயிரம் (1060) படத்தின் ‘’சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்’’.. குமுதம் (1961) படத்தின் ‘’மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுத்தும் பூனைக்குட்டி.’’ குழந்தையும் தெய்வமும் (1965) படத்தின் ‘’கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’’ என குழந்தைக்குரல் பாடல்களுக்காக மட்டுமே பெரும்பாலும் ராஜேஸ்வரி அழைக்கப்பட்டார். தமிழ் சினிமா மட்டு மல்ல, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி திரையுலகமும் அப்படித்தான் செய்தது..

1960கள் முழுக்க இப்படி போனது போலவே 1970களும் ராஜேஸ்வரிக்கு திரையுலகம், குழந்தை குரல் வாய்ப்பு களை மட்டுமே வழங்கியது. திக்கு தெரியாத காட்டில் படத்தில், ‘’ பூப்பூவாய் பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா” என்ற பாடல் மறுபடியும் மாஸ் ஹிட். ஆனாலும் காத்திருப்போர் பட்டியலிலேயே வைக்கப்பட்டார். 80-களும் 90-களும் இப்படித்தான் ராஜேஸ்வரியின் இசைப்பயணத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்ப்பு கொடுத்து பார்த்துக்கொண்டன.

இருந்தபோதிலும் எம்எஸ். ராஜேஸ்வரி பாடிய ஆரம்ப கால சாகாவரம் பெற்ற செவிக்கினிய எவர்கிரீன் பாடல்கள், அவரை என்றைக்கும் தமிழ் திரையுல பின்னணி உலகில் ஜாம்பவான்கள் வரிசையில்தான் வைத்து அழகு பார்க்கும்.