a
 
தலைப்பைப் பார்த்தவுடன், தமிழகத்தி்ல் என்றுதானே நினைப்பீர்கள்..? இது நடந்தது ஒடிசாவில்!
தங்களது குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யக் கோரி சட்டப்பேரவையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் காலில் விழுந்து தலித் மற்றும் பழங்குடிப் பிரிவு எம்.எல்.ஏ.க்கள் கெஞ்சினார்கள்.
ஒடிசா மாநிலத்தின் மறைந்த சட்ட அமைச்சர் ரகுநாத் பட்நாயக்கிற்கு அம் மாநில சட்டசபையில் இரங்கல் தெரிவித்தவுடன் சட்டப்பேரவையை விட்டு முதல்வர் நவீன் பட்நாயக் வெளியேறவிருந்தார். அப்போது தலித், பழங்குடிப்பிரிவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென அவர் காலில் விழுந்து மன்றாடினர்.
முன்னதாக, “ஒதுக்கீடு காலி இடங்கள்” சட்டத்தை அமல்படுத்தக் கோரி இந்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் பட்நாயக் அறைக்கு வெளியே நேற்று தர்ணாவில் ஈடுபட்டபோது இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில்தான் முதல்வர் வெளியேறும் தருணத்தில் திடீரென எழுந்து நின்ற தலித்/பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மன்றாடினார்கள்.  ஆனால் பட்நாயக் எதுவும் பேசாமல் மவுனமாக அவையை விட்டு வெளியேற தயாரானார்.  உடனே இந்த எம்.எல்.ஏ.க்கள் அவர் காலில் விழுந்து கெஞ்சத் தொடங்கி விட்டார்கள். .
காலில் விழுந்தது பற்றி பேசிய கங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரபுல்ல மஜ்ஹி “மாநிலத்தின் 38% மக்களின் நலன்களுக்காக முதல்வர் காலில் விழுந்ததை நாங்கள் மானக்குறைவாகக் நினைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த ஒடியா கலாச்சாரத்தையே பின்பற்றினோம். ஆனால் ‘மாண்புமிகு’ முதல்வர் நேயமற்ற இருதயத்துக்குச் சொந்தக்காரர். ஆகவே எங்களைப் புறக்கணித்தார்.
அடித்தட்டு மக்களுக்கு பயனளிக்கும் அந்தச் சட்டத்தை அமல்படுத்த அவையிலிருந்த அனைவரையும் ஆதரிக்கும்படி  அழைத்தோம். கடந்த இரவு சட்டப்பேரவை அதிகாரிகள் குளிர்சாதன வசதியை முடக்கி எங்களை இழிவு படுத்தினார்கள்.  ஆனால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் மீண்டும் இயக்கினர்” என்று தெரிவித்தார்.
ஆனால் “சட்டப்பேரவையின் புனிதம் மீறப்பட்க் கூடாது. அவர்கள் ஜனநாயக மரபுகளின்படி போராட்டம் நடத்த வேண்டும்” என்று பிஜு ஜனதாதள செய்தித் தொடர்பாளர் சசிபூஷன் பெஹெரா தெரிவித்தார்.
எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த பாஜக உறுப்பினரான ரபி மாலிக் என்பவர்  எம்.எல்.ஏ. “சட்டப்பேரவையின் புனிதத்திற்கு நாங்கள் எந்தவித களங்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 38% அடித்தட்டு மக்களின் நலன்கள் பற்றிய விவகாரத்தை எழுப்பினோம், இது முக்கியமானது” என்று கூறினார்.