மக்களுக்கு பயந்து மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை! மின்சாரம் தாக்கி பலி!

தெலங்கானா மாநிலத்தில் மக்களுக்கு பயந்து மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

சம்பவத்தன்று சிறுத்தை புலி ஒன்று காட்டிலிருந்து உணவு தேடி  ஊருக்குள் புகுந்தது.

ஆந்திரா தெலங்கானா மாநிலத்தில்,  நிஜாமாபாத் மாவட்டத்தில் மல்லாராம் வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 4வயது சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதையறிந்த அந்த பகுதி மக்கள் சிறுத்தை காட்டை நோக்கி விரட்டியுள்ளனர்.

மக்களை கண்டு பயந்த சிறுத்தை, மக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எண்ணி அருகிலிருந்த மின் கம்பத்தில் சரசரவென ஏறி உச்சிக்கு சென்றது.

பாவம், அந்த மின் கம்பத்தில் மின்சாரம் சென்றுகொண்டிருந்தது அந்த சிறுத்தைக்கு தெரிய வாய்ப்பில்லை. மக்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள மின்கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின் கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த சிறுத்தையின் உடலை மீட்டு, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.