பீஜிங்

சீனாவில் நேற்று கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 100  ஐ விட குறைந்துள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கோவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல் சீனா முழுவதும் பரவி வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கி உள்ளது.  உலக சுகாதார மையம் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.  அந்த அமைப்பின் ஆலோசனைப்படி பல நாடுகளிலும் பயணத்தடை உள்ளிட்ட பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.   நேற்று வெளியான தகவலின்படி சீனாவில் 74 பேர் அதாவது 100 க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.   கடந்த ஜனவரி 18 ஆம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் இந்த எண்ணிக்கை இவ்வளவு குறைந்துள்ளது.  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது.

நேற்று கொரோனா வைரஸால் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் வுகான் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்   சீனாவில் மட்டும் மொத்தம் இதுவரை3070 பேர் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.