Random image

எழுவர் விடுதலை… சட்டப்படி நடக்கட்டும்!: திருநாவுக்கரசர்

“ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான ஏழு பேரின் விடுதலை விவகாரம், சட்டப்படி நடக்கட்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம்.  இதுகுறித்து ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பலாம் என்று உச்ச நீதிமன்றம்   தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் மற்றும் பொருளாளர்கள் கூட்டம் டில்லியில் நேற்று (செப்டம்பர் 6) காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல் மற்றும் அமைப்புப் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:

 

“ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் எதுவோ அதன்படி நடக்கட்டும். ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அது மக்கள் மனதில் இன்னும் காயமாக இருக்கிறது.  அதேநேரத்தில் ஏழு பேரும் பல வருடங்களாகச் சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் சிறையில் இருப்பதற்காக வருந்துவதாக ராகுல் காந்தியே குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இறந்ததற்காகவும் வருத்தப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எவரையும் பழிவாங்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்காத நிலையில், அனைத்து விவகாரமும் சட்டப்படி நடக்கட்டும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசிய அவர், “பாஜக ஆட்சியில் நடைபெற்று வரும் ரஃபேல் ஊழல் உள்ளிட்ட விவகாரங்கள், கட்சிக்கு உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டிகள் அமைத்தல், தேர்தல் வரவுள்ளதால் கட்சியின் வளர்ச்சிக்காக மாநில அளவில் நிதி திரட்டுதல் உள்ளிட்ட பொதுவான விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியில் இருக்கும். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து 52 வருடங்களாகின்றன. தமிழக அமைச்சரவையிலும் இடம்பெற்றதில்லை. ஆனால், இவ்வளவு நிதி திரட்ட வேண்டும் என்று நிர்ணயித்தால் கண்டிப்பாக திரட்டித் தருவோம்” என்று கூறினார்.