பெங்களூரு:

ர்நாடக மாநில காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள எம்எல்ஏக்களின் கடிதம் சரியான முறையில் இல்லை என்று, சபாநாயகர் ரமேஷ், ஆளுநர் வஜுபாய்வாலாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார்.

மேலும், எம்எல்ஏக்கள் தன்னிச்சையாக வந்து ராஜினாமா கடிதம் கொடுக்கட்டும் என்றும்  கர்நாடக சபாநாயகர் கூறி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைவர்  காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு எதிராகவும், பதவி கேட்டும் காங்கிரஸ் கட்சி மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்கள் அவ்வப்போது மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களுக்கும் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ள 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்கள் உள்பட 13 பேர், தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கும் வகையில், சபாநாயகரை சந்திக்க சட்டமன்ற செயலகம் சென்றனர். அங்கு சபாநாயகர் இல்லாத நிலையில்,அவரது  செயலாளரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய நிலையில், கவர்னர் வஜுபாய்வாலாவையும் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதன் காரணமாக  ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார்,

ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள எம்எல்ஏக்களின் கடிதங்களை  பரிசீலனை செய்ததாகவும்,  அதில், 8 பேர் மனுக்கள் சரியான முறையில் இல்லை என்று தெரிவித்து உள்ளார். மேலும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே நபர் சபாநாயகர் மட்டுமே.  அப்படி இருக்கும்போது, எம்எல்ஏக்கள்  தனிப்பட்ட முறையில் வந்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுக்கட்டும்,

“யார் வேண்டுமானாலும் வந்து ராஜினாமா செய்யலாம்; “ நான் மாலை வரை என் அலுவலகத்தில் இருப்பேன். ஆனால் நான் அவற்றை சரிபார்க்க வேண்டியிருப்பதால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. நான் விதிப்படித் தான் செல்ல முடியும்.  அதைப் புரிந்துகொண்டு பின்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நான் தவறு செய்ய விரும்பவில்லை; எதிர்காலம் என்னை குற்றம் சாட்டப்பட்டவராக கருதக்கூடாது.

எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் தொடர்பாக  கவர்னர் வஜுபாய் வாலாவுக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (12ந்தேதி) கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.