மும்பை தாக்குதலை இந்து தீவிரவாதமாக காட்ட பாக். முயற்சி: முன்னாள் காவல்துறை அதிகாரி திடுக்கிடும் தகவல்

மும்பை:  லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பின்னணியில் நடத்தப்பட்ட மும்பை தாக்குதலை இந்து தீவிரவாதமாக காட்ட முயற்சித்து இருக்கும் தகவல் இப்போது வெளியாக இருக்கிறது.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் மார்க்கமாக மும்பையில் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.  மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர்.

உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். உயிருடன் சிக்கிய அஜ்மல் அமீர் கசாப் 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

இந்த வழக்கை மும்பை முன்னாள் காவல் ஆணையாளர் ராகேஷ் மரியா, ‘லெட் மீ சே இட் நவ்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை அவர் பதிவிட்டுள்ளார்.

மும்பை தாக்குதலை நடத்தியது பெங்களூரு நகரை சேர்ந்த சமீர் சவுத்ரி என்ற இந்து என்று அடையாளம் காட்ட லஷ்கர் இ தொய்பா முயன்றது என்று அதிர்ச்சி விவரத்தை அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் எல்இடி இயக்கத்துடன் ஐஎஸ்ஐயும் கைகோர்த்து செயல்பட்டது. ஒரு புகைப்படத்தில், கசாப்பின் வலது கையில் அவர் இந்து என்று அடையாளப்படுத்தும் வகையில் சிவப்பு நிற கயிறு கட்டப்பட்டு இருந்தது.

அது இந்துக்கள் அணியும் புனித கயிறு.  அதனால் தாக்குதலை இந்து பயங்கரவாதம் என்று காட்சிப்படுத்த திட்டமிட்டு இருந்தனர். ஊடகங்களும் இதை பற்றியே பேசும் என்று நினைத்தனர், ஆனால், அப்படி எதுவும் நடக்க வில்லை என்று அந்த புத்தகத்தில் ராகேஷ் தெரிவித்துள்ளார்.