சென்னை:

ச்சநீதி மன்றம் ரஃபேல் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியுள்ள நிலையில்,மறுசீராய்வு மனுதாக்கல் செய்வோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஃமேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீடு வழக்குகளை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் நேரு படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 150 அடி உயர பிரமாண்ட கொடி ஏற்றும் வெள்ளோட்டம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி  செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது,  ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், ரஃபேல் ஒப்பந்தம் முறைகேடு குறித்த உண்மை வெளிவரவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்றார்.

மேலும் சபரிமலை தீர்ப்பு குறித்த கேள்விக்கு,  சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும்,  பெண்கள் கோவில்களில் கருவறை வரை சென்று வழிபட உரிமை உண்டு என்றார்.

மற்ற மதங்களில் உள்ளது குறித்து உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு,  மற்ற மதங்களில் பெண்களை அனுமதிப்பது பற்றிய பிரச்சினையை அந்தந்த மத தலைவர்கள் முடிவு செய்யட்டும். இந்து மதத்தில் இருக்கும் குறைகளை நாம் போக்குவோம் என்று கூறினார்.