புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்! அஜித் பவார்

மும்பை:

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து, துணைமுதல்வராக பதவியேற்ற நிலையில், பாஜக பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்பதை தெரிய வந்ததால், தங்களது பதவிகளை முதல்வரும், துணைமுதல்வரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து மீண்டும் சரத்பவார் அணிக்கு திரும்பிய அஜித்பவாரை நேற்று சட்டமன்றத்தில் சரத்பவார் மகள் சுலே கட்டியணைத்து வரவேற்ற நிலையில், நேற்று இரவு நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மும்பை நாரிமன் பாயின்டில் உள்ள ஒய்.பி.சவான் அரங்கில் நடைபெற்ற என்சிபி  எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அஜித்பவாரும் கலந்துகொண்டார்.

முன்னதாக  பாஜகவுக்கு ஆதரவு கொடுத்ததால், அவர்  தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவரக ஜெயந்த் பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று பதவி ஏற்க உள்ள கூட்டணி ஆட்சியின்போது, தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருந்து துணைமுதல்வர் உள்பட 2 பேர் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதில், துணைமுதல்வர் பதவியை அஜித்பவார் கைப்பற்றுவாரா அல்லது  ஜெயந்த் பாட்டீல் கைப்பற்றுவாரா என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அஜித்பவார், ‘‘எனக்கு அமைச்சரவையில் பொறுப்பு கொடுக்க வேண்டுமா? என்பது பற்றி சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்கள். நடந்ததெல்லாம் நடந்து முடிந்து விட்டது. இனி ஒரு புதிய அத்தியாசத்தை  தொடங்க விரும்புகிறேன்’’ என்றார்.