டில்லி

ணிரத்னம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென் உள்ளிட்ட 49 கலைஞர்கள் பிரதமருக்கு அளித்துள்ள கூட்டறிக்கையின் முழு விவரம் இதோ

கடந்த சில நாட்களாக மீண்டும் கும்பல் கொலை ஆரம்பித்துள்ளது.  பசுப்பாதுகாவலர்கள் என கூறிக் கொள்வோரின் கொலை சற்றே ஓய்ந்திருக்கும் வேளையில் தற்போது மற்றொரு விதமான கொலைகள் தொடங்கி உள்ளன.   மாற்று மதத்தினரை ஜெய்ஸ்ரீராம் என கூறச் சொல்லி அதற்கு மறுத்தால் கும்பலால் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது   இது குறித்து 49 கலைஞர்கள் இணைந்து பிரதமருக்கு கூட்டறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்.

இந்த கடிதத்தை இயக்குனர்களான அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், நடிகையும் இயக்குநருமான ரேவதி, கொங்கணா சென்ஷர்மா, நடிகைகள் கனி குஷ்ருதி ஆகியோர் இணைந்து இந்த கடிதத்தை அளித்துள்ளனர்.

அந்த கடிதத்தில்,

அன்புள்ள பிரதமருக்கு,

அமைதியை விரும்பும் மற்றும் இந்தியர் எனப் பெருமை அடையும் நாங்கள் நாட்டில் நடைபெறும் பல துக்க செயல்களினால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம்.

நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோசலிச குடியரசு நாடாகும்.  இங்கு அனைத்து ஜாதி மற்றும் மதம் சமமானதாகும்.  எனவே ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களுக்கு தரப்பட்ட உரிமையைச் சரியாகப் பெற இந்த கடிதத்தை அளிக்கிறோம்.

தலித்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றுமுள்ள சிறுபான்மையினர் கும்பல் கொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.  தேசிய குற்றவியல் பதிவு கழகம் அளித்துள்ள தகவலின்படி  கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் தலித்துகள் மீதான தாக்குதல் 840 க்கும் அதிகமாக நடந்துள்ளன.  அதே நேரத்தில் அதற்கான தண்டனை அளிப்பது குறைந்துள்ளது.

அத்துடன் கடந்த 2009 ஜனவரி 1 முதல் 2018 அக்டோபர் 29 வரை 254 மதக் கலவரங்கள் நடந்துள்ளன  இந்த கலவரங்களில் சுமார் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் 579 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.   இதில்  இந்திய மக்கட் தொகையில் 14% பேர் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் 62%  ஆகவும்,  மக்கட் தொகையில் 2% கொண்ட கிறித்துவர்களுக்கு எதிராக 14% வழக்குகளும் பதிவாகி உள்ளன.  இந்த தகவல்களின் படி 90% கலவரங்கள் உங்கள் அரசு பதவி ஏற்ற 2014 ஆம் வருடம் மே மாதம் நிகழ்ந்துள்ளன.

பிரதமர் அவர்களே, இந்த கொலைகளை நீங்கள் பாராளுமன்றத்தில் கண்டித்துள்ளீர்கள்.  ஆனால் அது போதுமா? இந்த கலவரக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?   இந்த வழக்குகள் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் பதியப்பட்டு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.   சாதாரண கொலைகளுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்கும் போது இந்த கும்பல் கொலைகளுக்கு ஏன் அளிக்க கூடாது?  பயத்துடன் எந்த ஒரு மக்களும் தங்கள் சொந்த நாட்டில் வாழக்கூடாது.

ஜெய்ஸ்ரீராம் என்பது தற்போது சட்டத்தை மற்றும் விதிகளை எதிர்க்கும் போர்க்குரல் ஆகி உள்ளது.  பல கும்பல் கொலைகள் இந்தப் பெயரில் நிகழ்கின்றன.   மதத்தின் பெயரால் நடக்கும் இந்த கொலைகள் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.   இது கற்காலம் இல்லை.  இந்தியாவில் உள்ள பல இனத்தவருக்கும் ராமர் என்பது ஒரு புனிதமான பெயராக உள்ளது.  நாட்டின் உயரிய பதவியில் உள்ள நீங்கள் ராமர் பெயரில் இவ்வாறு நடப்பதை நிறுத்த வேண்டும்.

ஜனநாயகம் என்றால் எதிர்ப்பும் இருக்கும்.   அதனால்  அரசை எதிர்ப்போருக்கு தேச விரோதி எனவும் நகர நக்சல்கள் எனவும் பெயரிடுவது தவறானது.  அரசியலமைப்பு சட்டம் 19 அனைவருக்கும் பேச்சு மற்றும் கருத்து உரிமையை அளித்துள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

ஆளும் கட்சியை விமர்சிப்பது நாட்டை விமர்சிப்பதாகாது.  உலகில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியில் உள்ள போது இவ்வாறு நடந்துக் கொண்டதில்லை.   இது நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமே செய்து வருகின்ற செயலாகும்.  எனவே ஆளும் கட்சியை எதிர்ப்பது என்பது நாட்டை எதிர்ப்பது என கூற  முடியாது.    வெளிப்படைத் தன்மையுடன் எதிர்ப்பை நசுக்காமல் இருப்பதே நாட்டை வலுவாக்கும்.

எங்கள் யோசனைகள் உங்களுக்குச் சரிவர புரிந்திருக்கும் என நம்புகிறோம்.   இந்தியர்கள் என்னும் முறையில் நாங்கள் இந்தியாவின் எதிர்காலத்தை மிகவும் விரும்புகிறோம்.

தங்கள் நம்பிக்கைக்குரிய.

( 49 கலைஞர்களின் கையொப்பம்)