கொல்கத்தா

மேற்கு வங்க ஆளுநர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இடையே கடிதம் மூலம் போர் தொடர்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் 795 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 48 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  139 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதற்கு முக்கியக் காரணம் மேற்கு வங்க முதல்வர் அம்மாநிலத்தில் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தாதது என மத்திய அரசு தெரிவித்து அம்மாநிலத்தை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அமைத்தது.

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கார் இ மெயில் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய கடிதத்தில் ”மேற்கு வங்க மக்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதில் நிறைய குளறுபடிகள் நிகழ்கின்றன.  அத்துடன் ஊரடங்கை மீறி மாநிலத்தில் நிலைமை மோசமாகி உள்ளது.  மாநிலம் முழுவதும் கொரோனா சோதனை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு கடிதத்தில் மத்தியக் குழுவுக்கு மேற்கு வங்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.  இதைக் கண்டித்து ஆளுநருக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதி இருந்தார்.  அந்தக் கடிதத்தில் ஆளுநர் அரசியலமைப்பு தர்மத்தை மீறியதாகவும் மாநில அரசுக்கு எதிராகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி வருவதாகவும் மம்தா குறை கூறி இருந்தார்.

அதற்கு பதில் அளித்து ஆளுநர் ஜகதீப் தங்கார் இரு பதில் கடிதங்கள் அனுப்பினார்.  அதற்கு மம்தா பானர்ஜி அனுப்பி உள்ள பதில் கடிதத்தில் “இது போல ஒரு விமர்சனத்தை அரசியலைப்பு சரித்திரத்தில் யாருமே செய்ததில்லை.  இதற்கு ஒரு முன்னுதாரணமே கிடையது.  வேண்டுமென்றே வெறுப்பைக் காட்டிக் கடுமையான வார்த்தைகளால் தாக்கி அவமானப் படுத்தும் வகையில் கடிதங்கள் எழுதபட்டுள்ளன.

இந்த கடிதங்களை மட்டுமல்ல இதற்கு முந்தைய கடிதங்களைப் படிக்கும் போதும் எனக்குக் கோபத்தை விட வருத்தமே வருகிறது.  அடுத்தது நகைச்சுவையாக உள்ளது.  உங்களுடைய இத்தகைய நடவடிக்கைகள் உங்கள் பொது வாழ்வில் மிகவும் தவறானதாகும்.  இது உங்கள் தகுதிக்கும் பதவிக்கும் சரியானது இல்லை.” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு டிவிட்டரில் ஆளுநர் ஜகதீப் தங்கார், “உணமையாகவும் சட்டப்படியும் அவருடைய கடிதத்தில் ஆளுநருக்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து முதல்வர் எதுவும் தெரிவிக்கவில்லை.  ஆனால் அவர் நான் அவருடைய பணிக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்னும் நிலையில் குற்றம் சாட்டி வருகிறார்.  கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்நிலையில் அவருடைஅய் ஒத்துழைப்பு மிகவும் தேவை என நான் கூறி வருகிறேன்.  அவர் அளிப்பார் என நான் நம்புகிறேன்” என பதிந்திருந்தார்.

அதற்கு பதில் அளித்து மம்தா பானர்ஜி ஆளுநருக்கு அனுப்பிய 5 பக்க கடிதத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநரின் கடமைகள் குறித்துத் தெரிவித்திருந்த வரிகளைக் குறிப்பிட்டிருந்தார்.  அதில் ”ஆளுநர் எப்போதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.  ஆளுநர் எப்போதும் அரசியல் கட்சிகள் இடையே உள்ள ஒத்துழையாமை, எதிர்ப்பு, போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்.  குறிப்பாக ஆளுநர் எவ்வித குதிரைப்  பேரத்தில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த கடிதத்தில் ”மொத்த்த்தில் உங்களுக்கு எங்கள் அரசின் நடவடிக்கையில் ஒப்புதல் இல்லை எனில் அதை நீங்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும்.   ஆனால் அது உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனில் துரதிருஷ்ட வசமாக உங்களுக்கு அதற்கு மேல் அதிகாரம் இல்லை.

எனது அரசு சட்டப்பேரவை தீர்மானங்களின் அடிப்படையில் இயங்குவதால் வேறு எதுவும் நீங்கள் செய்ய முடியாது.  உண்மை எப்போதுமே கசப்பானது தான்.  ஆனால் இது அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படும் உண்மை.  தற்போது நாட்டில் குறிப்பாக மேற்கு வங்காட்தில் நிலவும் சூழலில் உங்கள் அதிகாரத்தைக் காட்டுவதை நிறுத்திக் கொள்வது நல்லதாகும்” எனப் பதில் அளித்துள்ளார்.

இதற்கு விரைவில் ஆளுநர் பதில் அளிப்பார் என அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுவதால் இந்த கடிதப் போர் மேலும் தொடர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.