புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சாலை ஒன்றுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரைச் சூட்ட பரிந்துரை செய்திருந்தது. இந்த கோப்புக்கு மாநில கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்கி உள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைவைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்படும்  என்றும், புதுவை பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை, காரைக்கால் பட்டமேற்படிப்பு மையம், புதுவையில் உள்ள புறவழிச்சாலைக்கும், நகரில் உள்ள ஒரு சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து,  புதுச்சேரியில்  கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக குழு ஒன்றை மாநில அரசு நியமித்து உள்ளது. இந்த குழுவினர் சிலையை எங்கு நிறுவலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.

அதுபோல, சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்துக்கும் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது  மேலும், புதுவை பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை ஏற்படுத்திக் கொள்ள பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டும் கோப்புக்கும் கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கவர்னர் கிரண்பேடி,  தன்னிடம் வரும் கோப்புகள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டது குறித்து வாரந்தோறும் விவரங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில்,  25-க்கும் மேற்பட்ட கோப்புகளுக்கு அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதில்,  புதுச்சேரி  இந்திரா காந்தி சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை உள்ள சாலைக்கு, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதுள்ளதாகவும், காரைக்கால் புறவழிச்சாலைக்கும் டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை என்ற பெயர் சூட்டும் கோப்புக்கும் அனுமதி அளித்துள்தாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.