மாநிலஅரசுக்கு துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: தீர்ப்பு குறித்து சுப்பிரமணியசாமி கருத்து
டில்லி:
டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேஷங்களில் மாநிலஅரசுக்கே அதிகாரம் என்றும், துணைநிலை ஆளுநர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த தீர்ப்பை பாஜக மூத்த உறுப்பினரும், மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி வரவேற்றுள்ளார். உச்சநீதி மன்றம் சரியான தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், டில்லி மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், மாநில அரசு, அரசியலமைப்புக்கு மாறாகவோ, தேசிய பாதுகாப்புக்கு எதிராகவோ செயல்பட்டால் துணைநிலை ஆளுநர் அதில் தலையிடலாம்,எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.
துணைநிலை ஆளுனராக பதவி வகித்து வரும் மத்திய அரசின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சியினர் ஆட்சி செய்து வரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு எதிராக செயல்பட்டு மக்கள் நலப் பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கில், அரசியலைப்பு சட்டத்தின்படி துணைநிலை ஆளுநருக்கு தனி அதி காரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது அமைச்சரவை யின் வழிகாட்டுதலின்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பாஜக மூத்த உறுப்பினரான சுப்பிரமணிய சாமி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.