லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 3 குழந்தைகள் பலி, 100க்கும் மேற்பட்டோர் மாயம்

டிரிபோலி:

லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று மூழ்கியது. இந்த சோக விபத்தில் 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை அகதிகளை ஏற்றிக்கொண்டு டிரிபோலி பகுதியில் இருந்து ஒரு நாட்டுப்படகு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த படகில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தாகவும், படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எஞ்சின் வெடித்து தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக படகில் சென்றவர்கள் உயிர் தப்ப எண்ணி கடலுக்குள் குதித்ததாகவும், இதில் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலை தொடர்ந்து லிபியாவின் கடலோர பாதுகாப்பு படை மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில் படகில் 120 அகதிகள் சென்றதாகவும்,  அவர்களில் 16 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 3 குழந்தைகளின் சடலங்கள் கடற்கரையில் ஒதுங்கின. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படகில் பயணம் செய்தவர்கள் மொராககோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் என்றும், அதிக அளவிலான அகதிகளை ஏற்றிச்சென்றதாலேயே விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.