புதுடெல்லி: இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற உதவும் வகையில், ரூ.1.25 லட்சம் கோடி‍யை, அரசுக்கு கடனாக வழங்குகிறது இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சுமார் ரூ.8.41 லட்சம் கோடி மதிப்பிலான பாரத்மாலா திட்டத்தை சரியான நேரத்தில் நிறைவுசெய்ய வேண்டியுள்ளது. இதன்மூலம், இந்தியாவை சிறந்த சாலை இணைப்புக்கொண்ட நாடாக மாற்ற முடியும். இந்த மாபெரும் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக, மத்திய அரசு பல்வேறான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, ஓய்வூதியம் மற்றும் காப்பீடு தொடர்பான சேமிப்புகளில் கடன் வாங்கியும் நிதி திரட்டப்படுகிறது.
எல்.ஐ.சி. நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஓராண்டில் ரூ.25000 கோடி நிதியையும், மொத்தம் 5 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி நிதியையும் அளிக்கும். விதிமுறைகளின் அடிப்படையில் இந்தக் கடன் பெறப்படுகிறது. இந்த நிதி சாலைகள் கட்டமைப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி. தலைவர் ஆர்.குமார், கடந்த வாரம் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.