சட்டமன்றத்தில் உரை: புதுச்சேரி அரசுக்கு கிரண்பேடி திடீர் பாராட்டு!

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய கவர்னர் கிரண்பேடி, புதுச்சேரி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களையும் புதுச்சேரி மக்களையும் அரசியல் கட்சிகளையும் பாராட்டினார்.

புதுச்சேரி மாநிலத்தில், நடப்பாண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடர்  ஆளுநர் கிரண்பேடி உரையுடன்  நேற்று தொடங்கியது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மாநில சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.

சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரை….

புதுச்சேரி ஆட்சிபரப்பில் வசிக்கும் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து நான் மிகவும் திருப்தி அடைந்துள்ளேன்.

மக்களவை பொதுத்தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எனது பாராட்டுதல்களுக்கு உரியவர்கள் ஆவர். நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால் செலவினங்களை வருவாய்க்கு தகுந்தவாறு சீர்செய்து கொள்ளவேண்டிய நிலையில் அரசு உள்ளது.

பல்வேறு நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஏழை, எளிய மக்களின் நலன்களை பேணுவதற்கு தேவையான நிதியை அரசு தொடர்ந்து தொய்வில்லாமல் ஒதுக்கீடு செய்து வருகிறது.

கடந்த நிதி ஆண்டில் அரசின் செலவினம் ரூ.7,342 கோடியாக இருந்தது. இது 2018-19ம் நிதி யாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.7,881 கோடியில் 93.16 சதவீதம் ஆகும்.

நிதி குறைவாக இருந்தபோதிலும் புதுவை அரசு தற்போது நடைமுறையிலுள்ள நலத்திட்டங் களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் 2008-09ம் ஆண்டில் பெறப்பட்ட பொதுச்சந்தை கடன் ரூ.351 கோடியை கடந்த ஆண்டு திருப்பி செலுத்தி உள்ளது. நிர்வாக காரணங்கள் மற்றும் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் இவ்வாட்சிபரப்பு அனைத்து துறைகளிலும் சரியான திட்டமிடலால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

மேலும் நிதி ஆதாரங்கள் முறையாக செலவு செய்யப்படுவதால் மாநிலத்தின் நிதி நிலைமை சீராக உள்ளது. அனைத்து நிதிக்குறியீடுகளும் பரிந்துரைக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளன.

இவ்வாட்சி  மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை பேணிக்காக்க நடப்பில் உள்ள மற்றும் புதிய பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த அரசு உறுதியுடன் முன்னெடுத்து சென்று புதுச்சேரியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்.

இவ்வாறு கூறினார்.