’தனிமைப்படுத்திக் கொள்ளாதோருக்கு  ஆயுள் தண்டனை’’- கொந்தளித்த எம்.பி.

கொரோனா வைரசை அடக்கும் முயற்சியில் மத்திய –மாநில அரசுகள் முழு மூச்சாய் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால், இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாகச் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறித்து கர்நாடக மாநிலம் சிக்மகளூரூவில் பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் ஷோபா கரண்ட்லாஜே பரபரப்பு  பேட்டி அளித்துள்ளார்.

அதன் சாராம்சம் இது:

‘’ டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நாடு முழுவதும் சென்று கொரோனா வைரசைப் பரப்பி வருகிறார்கள். மாநாட்டில் பங்கேற்ற பலரைக் காணவில்லை.

மாநாட்டில் கலந்து கொண்டோர் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அவர்கள் அதனைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளவும் தவறி விட்டனர்.

விதிகளை  மீறிய இந்த நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’’

என்று கொந்தளித்துள்ளார், பா.ஜ.க.வின் ஷோபா.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்