திருச்சி,

போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துதுறை தனியார் பஸ்களை அதிக அளவில் இயக்க முயற்சித்து வருகிறது. அதுபோல தனியார் கல்லூரி பஸ்களை நகரங்களுக்குள் இயக்கி வருகிறது.

அதுபோல தற்காலிக டிரைவர்களைக்கொண்டும் பஸ்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் அரசு பேருந்துகளை இயக்க மணல் குவாரிகளுக்குச் சென்று லாரி ஓட்டுநர்களுக்கு அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கல்,  மணல் லாரி டிரைவர்களின் கண்மூடித்தனமாக டிரைவிங்கால் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது அரசு பஸ்களை இயக்க லாரி டிரைவர்களை அரசு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அழைத்து வர முயற்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே தற்காலிக டிரைவர்களால் இயக்கப்படும் பேருந்துகளில் பல இடங்களில் பிரச்சினைகளை சந்தித்து வரும் வேளையில் தற்போது மணல் லாரி டிரைவர்களையும், கல்குவாரி  லாரி டிரைவர்களையும் அழைத்து பஸ்களை இயக்க முயற்சித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.