வேலூர் சிறையில் கைதி தற்கொலை: சிறைக்காவலர் சஸ்பெண்டு

வேலூர்:

வேலூர்  மத்திய சிறைச்சாலையில்  சிறை தண்டனை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  விவகாரத்தில் சிறை காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறை கழிப்பறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயுள்தண்டனை கைதி ஒருவர் காவலரின் ஷூ லேஸ் கயிற்றால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் அருகே உள்ள  ஆற்காடு  கலவை பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் என்பவர் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று கடந்த 1998ம் ஆண்டு முதல்  வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறையில் உள்ள கழிப்பறையில் கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சிறைத்துறை கொடுத்த தகவலின்பேரில் பாகாயம் போலீஸார் கஜேந்திரனின் சடலத்தை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயகாந்தன் சிறையில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, கைதி கஜேந்திரன் உயிரிழந்தது தொடர்பாக மற்ற கைதிகள், கைதியை மீட்டு சிகிச்சைக்குக் கொண்டு சென்ற காவலர்கள் உள்பட பலரிடமும்   விசாரணை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து சிறையில் பணியாற்றி வந்த 2-ம் நிலை காவலர் பிரகாஷை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.