குழந்தைப் பெறுவதற்காக ஆயுள் கைதிக்கு 4 வாரகாலம் பரோல் விடுப்பு

சண்டிகார்: கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதி, திருமண உறவில் ஈடுபட்டு, சந்ததியை உருவாக்கும் பொருட்டு, அவருக்கு 4 வார காலம் பரோல் விடுப்பளித்து உத்தரவிட்டுள்ளது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ரோடக் பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர், கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், கடந்த 8 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன் பெற்றோருக்கு தான் ஒரே மகன் என்பதாலும், திருமணமான குழந்தையற்ற இளைஞன் என்பதாலும், தன்னுடைய குடும்ப சந்ததியை உருவாக்க வேண்டி, தன்னை பரோலில் விடுவிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.

இவருடைய கோரிக்கை ஏற்கனவே, டிவிஷனல் கமிஷனரால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு, 4 வாரங்கள் பரோல் அளித்து தீர்ப்பளித்துள்ளது.

– மதுரை மாயாண்டி