மகாராஷ்டிரா முதல்வருக்கு கொலை மிரட்டல் : அம்பேத்கார் பேரனின் அதிர்ச்சி தகவல்

மும்பை

காராஷ்டிரா முதல்வருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் தெரிவித்துள்ளார்.

சட்டமேதை பி ஆர் அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார்.  இவர் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக உள்ளார்.  இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை மும்பையில் நிகழ்த்தினார்.

அந்த சந்திப்பில் பிரகாஷ் அம்பேத்கார், “மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கு வலது சாரிகளால் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.   இது குறித்து மகாராஷ்டிராவில் வன்முறைக்கு காரணம் எனக் கூறப்படும் சம்பாஜி பிடேயின் உதவியாளர் ஒருவர்  ஒரு சமூக வலைத் தளத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.  அதில் முதல்வர் தேவேந்திரா மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் பாபட் ஆகியோர் விஷப் பூச்சிகள் என்றும், அந்த பூச்சிகளை ஒழித்தாக வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களைப் போன்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து வேறுபாடு  இருந்தாலும் நாங்கள் யாரையும் அழிக்க நினைப்பதில்லை.   ஆனால் இவர்களைப் போன்றவர்கள் ஆபத்தானவர்கள்.    ஹஃபீஸ் சயீத் போன்ற இன்னொரு தீவிர வாதிகளை இவர்கள் இயக்கம் உருவாக்கும்.    மகாராஷ்டிராவில் இது போல யாரும் பேசியதில்லை.   இவருடைய குரு யார்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் இது குறித்து மகாராஷ்டிரா காவல்துறையினர் முதல்வருக்கு தகவல் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.