தாத்தாவின் மரணத்தால் திசைமாறிய வாழ்க்கை!: மனம் திறந்த ஐ.ஏ.எஸ். அகடமி சங்கர்

பிரபலமான சங்கர் ஐ.ஏ.எஸ். அகடமியின் நிறுவனர் சங்கர் இன்று தற்கொலை செய்துகொண்டார். நூற்றுக்கணக்கானவர்கள் இவரது அகடமியில் பயின்று ஐ.ஏ.எஸ். தேறி முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த பலரையும்கூட சிறப்பான பயிற்சி அளித்து ஐ.ஏ.ஸ். தேற வைத்தவர் சங்கர். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சங்கரும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இது குறித்து அவர் பல முறை பேசியிருக்கிறார்.

அவற்றின் நெகிழ்வான தொகுப்பு:

“திருச்செங்கோடு அருகே பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவன் நான். ஏழை குடும்பம். ஊத்தங்கரையில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். ஐந்து பாடங்களிலும் சேர்த்து மொத்தம் 32 மதிப்பெண்கள்தான் எடுத்தேன்.

பருத்திக் காட்டில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்த என் அப்பா தேவராஜ் மிகவும் வருத்தப்பட்டார். “இனி உனக்கு படிப்பு சரிவராது.  நல்லாக்கவுண்டம்பாளையத்தில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்குப் போ” என்று அனுப்பிவிட்டார்.

அங்கு ஒரு ஆண்டு தறி வேலை பார்த்தேன். அடுத்த ஆண்டு நல்லசமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளே ஆங்கிலப்பாட ஆசிரியர்  என்னைப் புத்தகத்தை எடுத்துப் படிக்கச் சொன்னார். தட்டுத் தடுமாறிப் படித்து முடித்தேன். ஆசிரியர் என்ன சொல்வாரோ என்ற பயம் மனதுக்குள் இருந்தது. ஆனால் ஆசிரியரோ, “நன்றாகப் படித்தாய்” என்று பாராட்டி, சாக்லேட் கொடுத்தார். அந்த முதல் பாராட்டு, முதல் பரிசு எனக்குள் ஒரு நம்மிக்கை அருவியையே கொட்டியது போல் இருந்தது. அதனால் படிப்பில் முழு ஈடுபாடு ஏற்பட்டது. பத்தாம் வகுப்பில்

பண்ணிரண்டாம் வகுப்பு தேறினேன். அடுத்து கல்லூரியில் சேரவேண்டும்.

ஆனால் எனக்கோ திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்கிற ஆசை.  ஆகவே, இம்ப்ரூவ்மென்ட் எழுதுவதாகச் சொல்லிவிட்டு, திரையரங்குகளில் தவமாய் தவமிருந்தேன். ஏகப்பட்ட திரைப்படங்கள் பார்த்தேன்.

இதனால் இம்ப்ரூமெண்ட் தேர்வில், ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்களைவிட குறைவாகவே வங்கினேன்.

திரைப்பட கனவை ஒதுக்கிவைத்துவிட்டு, இளங்களை வேளாண்மை படிப்பில் சேர்ந்தேன்.

அந்த காலகட்டத்தில் எனக்கு குறும்புத்தனம் அதிகம்.  வைஷ்ணவி என்ற சக மாணவியை நான் ராகிங் செய்ய.. அது குறித்த புகார் பிரின்ஸிபாலுக்கு சென்றது.

ஒரு வருட காலம் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டேன்.

என் தாத்தாவுக்கு இது பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில் என் தாத்தா ரெங்கையாவைப்  பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.

அப்பாவால் நல்லாக்கவுண்டம்பாளையத்துக்கு தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன் அல்லவா. அப்போதிலிருந்தே இருவரும் இணைபிரியா நண்பர்கள் ஆனோம். அந்த பகுதியில் நானும் என் தாத்தாவும் சுற்றாத,  விளையாடாத தோப்புகள் எதுவும் கிடையாது. சிறுவனான என்னைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி ஒவ்வொரு தோப்பாக அழைத்துச் செல்வார்.

என் மீது அவருக்கு கட்டுக்கடங்காத பாசம்.. அதோடு அத்தனை நம்பிக்கை. எல்லோரும் போற்றும்படியான மனிதனாக நான் உருவாவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

என் மீது இத்தனை பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்த என் தாத்தாவுக்கு, ராகிங் புகார் காரணமாக நான் கல்லூரியல் இருந்து நீக்கப்பட்டதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“மனிதனுக்கு முக்கயம்தான். அதைவிட ஒழுக்கமே மிக முக்கியம்” என்று சொல்லிச் சொல்லி வளர்த்தவர் அல்லவா?

கல்லூரியில் இருந்து நான் நீக்கப்பட்டு வீட்டுக்கு வந்ததும் என்னுடன்  அவர் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. எனக்கு இது மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரிடம் பேச பலமுறை முயற்சித்தும் அவரிடமிருந்து பதில் இல்லை.

ஆனாலும் எனக்கொரு எண்ணம்… எப்படியானாலும் தாத்தா நம்முடம் பேசுவார் என்று நினைத்தேன்.

ஆனால் என்னுடன் பேசாமலேயே.. மன விரக்தியிலேயே தன் மூச்சை நிறுத்திக்கொண்டார் தாத்தா.

அது பெரும் இழப்பு எனக்கு. அதோடு வாழ்க்கை என்றால் என்ன என்பதை எனக்குப் புரிய வைத்த இழப்பு.

தாத்தாவின் மரணம் எனக்குள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியது.

இனியும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கக்கூடாது. வாழ்க்கையில் லட்சியப் பிடிப்பு இருக்க வேண்டும் என்பதை உணரவைத்த இழப்பு.

கல்லூரியில் எனது ஒரு வருட சஸ்பெண்ட் காலம் முடிந்தது.  அதே கல்லூரியில் முதலாம் வருட படிப்பில் சேர்ந்தேன். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் இரண்டாம் வருடத்துக்கு சென்றிருந்தனர்.

இது ஒருவகையில் எனக்கு சோர்வை ஏற்படுத்தினாலும், படிக்க வேண்டும்… எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு மனதிற்குள் கனலாய் தகித்துக்கொண்டிருந்தது.

இதற்கிடையே இன்னொரு விசித்திரம்… எந்தப் பெண்ணை நான் ராகிங் செய்தேன் என்று கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டேனோ, அதே வைஷ்ணவியுடன் எனக்குக் காதல்.

இதற்கிடையே கல்லூரி முடித்தேன். மீண்டும திரைத்துறை மீதான ஆசை கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

அப்பா பாவம், மதுக்கடையில் வேலை பார்த்தபடி குடும்ப பாரத்தை தாங்கிக்கொண்டிருந்தார். நானோ, திரைப்பட கனவுடன் சென்னையில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

அப்போது  உறவினர் ஒருவர், “ஞான ராஜசேகரன் என்று திரைப்பட இயக்குநர் இருக்கிறாரே.. மோகமுள் என்ற நல்ல படத்தை இயக்கியவர்.  அவர் ஐ.ஏ.எஸ். படித்தவர். இப்போதும்  அரசு அதிகாரி.  அவரைப்போல நீயும் படித்து உயர்ந்த  நிலைமைக்கு வா. அதன் பிறகு திரைத்துறையில் முயற்சி செய்” என்றார்.

அவரது வார்த்தைகள் என்னை தீவிரமாக சிந்திக்க வைத்தன.

எம்.எஸ்ஸி., அக்ரி படிக்க நுழைவுத் தேர்வு எழுதினேன். அரசு ஃபெல்லோஷிப்புடன் அரியானாவில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கவனத்துடன் படித்து முடித்தேன்.

அடுத்து “சிவில் சர்வீஸ் எழுதி ஐ.ஏ.எஸ். ஆகலாம்ம்’ என்று தீர்மானித்தேன். டில்லிக்குச் சென்றேன்.

குடும்பத்திலோ மிகக்கடுமையான வறுமை. “ ஒரு ஆயிரம் ரூபாய் சம்பளத்திலாவது வேலைக்குச் சேர்ந்துவிடு’ என்று அப்பா வலியுறுத்தினார்.

இந்தப்பக்கம், “என் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று வைஷ்ணவி வற்புறுத்தினார்.

ஆனாலும் டில்லிக்குச் சென்றேன். என் சூழல் புரிந்து வைஷ்ணவியும் டில்லிக்கு வந்து, வேலைபார்த்தார். அவரது சம்பளத்தில்தான் என்னை படிக்க வைத்தார்.

2001, 2002 இரண்டு ஆண்டுகளும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி இறுதிக் கட்டம் வரை சென்றேன். ஆனால் இறுதியில் தோல்விதான்.

இந்த நிலில் என் அப்பா தேவராஜ் மாரடைப்பில் இறந்து போனார்.

மிகுந்த சோகமான காலகட்டம் அது. ஆனாலும் அடுத்தடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வுகளை சந்தித்தேன் தோல்விதான் பரிசாக கிடைத்தது.

இனியும் திருமணத்தைத் தள்ளிப்போட முடியாது என்கிற நிலை. வருமானத்துக்கு வழி வேண்டுமே!

ஐ.ஏ.எஸ். அகடமி துவங்கலாம் என்று தீர்மானித்தேன். அத்தேர்வில் வெற்றி பெறவில்லை என்றாலும் தேர்வு குறித்து நன்கு அறிந்திருந்தேன்.

நான்தான் ஐ.ஏ.எஸ். தேறமுடியவில்லை. ஆனால் பலரையு ஐ.ஏ.எஸ். ஆக்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. என் அம்மா தான் சிறுகச் சிறுக சேர்த்துவைத்திருந்த 720 ரூபாய் பணத்தைத் தனது பங்காக அளித்தார்.

சென்னை அண்ணா நகரில் 36 மாணவர்களுடன் முதல் வருடம் அகாடமி துவங்கியது… இப்போது வருடம்தோறும் முன்னூறுக்கும் அதிகமானவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு பயின்று தேர்ச்சி பெற்று முக்கிய பொறுப்புகளில் பணியாற்றுகிறார்கள்..” – இதுதான் தன் வாழ்க்கை குறித்து நெகிழ்ச்சியாக சங்கர் பல முறை பதிவு செய்தது.

எத்தனையோ பேருக்கு ஊக்கம் கொடுத்து அவர்களது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சங்கரின் முடிவுதான் மிக வேதனை அளிக்கிறது.