கொல்கத்தா

ரடங்கு காரணமாக தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களைப் போல் மேற்கு வங்கம் திருத்தாது என அம்மாநில முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் கொரோனா பரவுதல் அளவைப் பொறுத்து சமூக இடைவெளி விதிகள் மீறாமல் சில தொழில் மற்றும் வர்த்தகங்களை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உரிமை அளித்துள்ளது.   இதனால் ஒரு சில இடங்களில் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்  தொடங்கி உள்ளன.

ஊரடங்கால் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் அதைச் சரிக்கட்ட உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி உள்ளன.  இவற்றில் வேலை நேரம் 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டதும் ஒன்றாகும்.  இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு வீடியோ கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

அப்போது மம்தா பானர்ஜி, “கொரோனா பாதிப்பில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்க வழி இல்லை.   மேற்கு வங்கத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமப்புற உள்கட்டமைப்பைப் பலப்படுத்துவதே சிறந்த வழியாகும்.  பாஜக ஆளும் ஒரு சில மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளன என நான் கேள்விப்படுகிறேன்.    இம்மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களும் ஊழியர்களும் அதிக நேரம் பணி புரிந்து குறைவான ஊதியத்தைப் பெற உள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு பணி நிரந்தரமும் மறுக்கப்பட்டுள்ளது.  நாங்கள் இதை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம்.  இது போன்ற நடவடிக்கைகளை எப்போதும் எடுக்க மாட்டோம்.  இப்போதுள்ள தொழிலாளர் சட்டம் எப்போதும் தொடரும் என நான் உறுதி அளிக்கிறேன்.   மேற்கு வங்க மாநிலத்துக்குத் திரும்பி வரும் வெளி மாநில தொழிலாளர்களுக்கும் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.