திஸ்பூர்: பசுவின் சாணம், அதன் சிறுநீர் மூலம் புற்றுநோய் போன்று கொரோனா வைரஸ் நோயையும் குணப்படுத்த முடியும் என்று அசாம் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டசபையில் பசு கடத்தல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா பேசினார். அவர் கூறியதாவது:

மாட்டு சாணம் மற்றும் சிறுநீர் குறித்து அரசு ஆய்வு நடத்தி வருகிறது. சாணத்தை எரிப்பதன் மூலம், அதில் இருந்து வெளியேறும் புகைக்கு வைரசை கொல்வதற்கான சக்தி இருக்கிறது.

கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மாட்டு சாணம் உதவும் என்று நம்புகிறேன். மதச் சடங்குகளுக்காக மாட்டு சாணத்தையும், மாட்டு சிறுநீரையும் பயன்படுத்துவதன் பின்னணியில் அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.

குஜராத்தில் சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகள் பசுவிற்கு அருகில் உட்காரவைக்கப்பட்டு, அவர்களுக்கு மாட்டு சாணம் மற்றும் மாட்டு மூத்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறையின்மூலம் புற்றுநோயாளிகள் குணப்படுத்தப்படுவதாக நான் படித்திருக்கிறேன். அதனால்தான் அந்தக் காலத்தில் பசுவை வழிபட்டிருக்கின்றனர். பசு நமக்கு கொடுக்கும் ஒவ்வொன்றும் முக்கியமானது என்றார்.

மாட்டு சாணம், அதன் சிறுநீர் மற்றும் அதுதொடர்பான ஆய்வுகள் குறித்து பாஜக தலைவரும், அசாம் நிதியமைச்சருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.