டெல்லி:

முகமது, மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர். 58 வயதான இவர் தற்போது டெல்லியில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்கியுள்ளார்.

கடந்த வாரம் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து போர்களமாக மாறிய பகுதிகளில் ஒன்று  பகிரதி விகார்.

டெல்லியில் கடந்த வாரம் நடந்த வன்முறையின் முஸ்தபாபாத்தில் உள்ள ஈத்காவில் உள்ள நிவாரண முகாமில் உள்ளவர்களும் தாக்கப்பட்டனர். அதில் பாதிக்கப்பட்டவர்களில் முகமதுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25-ஆம் தேதி டெல்லியில் நடந்த வன்முறையின் போது பஹாரி விகார் பகுதி அருகே இருந்த இவரது வீடு போராட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து இவர் நிவாரண முகாமில் தங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 200-300 போராட்டக்காரர்கள், எனது வீட்டின் மீது கற்களை எறிந்ததுடன், துப்பாக்கியாலும் சுட்டனர். அந்த நேரத்தில் நான் எனது 26 வயது மகனுடன் வீட்டின் உள்ளே இருந்தேன். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், மாடியிலிருந்து குதித்து பக்கத்து வீட்டுக்கு ஓடி விட்டோம். கடந்த 29-ஆம் தேதி திருமணம் முடித்த விட்டு வந்த எனது மருமகளின் நகைகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர் என்று கூறினார்.

இதையடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டேன். எனது வீட்டின் முதல் தளம் தீ வைத்ததால் முழுவதுமான எரிந்து விட்டது. எனது மகன்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காப்பற்றி கொள்ள, எனது வீட்டை விட்டு சிறிது தூரம் தள்ளி நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முகமது, 1991-ஆம் ஆண்டில் நான் காஷ்மிரில் பணியாற்றி காயமடைந்தேன். தற்போது வரை இதுபோன்ற வன்முறையை கண்டதில்லை. இதனால், எனக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை என்று நினைக்க தோன்றுகிறது என்றார்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இதில் சந்த்பாக் பகுதியில் அங்கித் சர்மா என்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வன்முறையில் இறந்த அங்கித் சர்மாவின் குடும்பத்துக்கு நேற்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் இழப்பீடு அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அங்கித் சர்மா ஒரு துணிச்சலான அதிகாரி. வன்முறையின்போது அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரைக்குறித்து நாடே பெருமைபடுகிறது. அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.