சர்ஜிகல் ஸ்டிரைக்கைப் போல் பணமதிப்பிழப்பும் கொண்டாடப்படுமா ? காங்கிரஸ் கேள்வி

டில்லி

ர்ஜிகல் ஸ்டிரைக்கை கொண்டாடுவதைப் போல பணமதிப்பிழப்பையும் மோடி அரசு கொண்டாடுமா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்ஜிகல் ஸ்டிரைக் என அழைக்கபடும் தீவிரவாத முகாம்கள் அழிப்பு நடவடிக்கையை இந்திய ராணுவம் நடத்தியதில் ஏராளமான தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர்.   இந்த நிகழ்வு நடந்து 2 ஆண்டுகள் முடிந்ததை ஒட்டி இந்த மாதம் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பராக்கிரம பார்வா என்னும் கண்காட்சியை ஜோத்பூர் நகரில் மோடி தொடங்கி வைத்தார்.   சர்ஜிகல் ஸ்டிரைக் சமயத்தில் நமது ராணுவ வீரர்கள் நடத்திய பல வீர நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றன.   ஜோத்பூர் நகரில் இருந்து சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்த இடம் சுமார் 250 கிமீ தூரமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி ஒரு தொலை காட்சி நிகழ்வில், “பாஜக ஆட்சியில் ஒரு மைல் கல் என சர்ஜிகல் ஸ்டிரைக்கின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப் படுகிறது.

அதே நேரத்தில் மோடி ஆட்சியில் இந்த ஒரு நிகழ்வு மட்டும் தான் மைல் கல்லா?  மற்ற மைல் கற்களாக பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி அமுலாக்கம் உள்ளதை பாஜக நினைவில் கொள்ளவில்லையா?

இவைகளால் பல சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் அழிந்ததை இந்த அரசு மறந்து விட்டதா?   அதை எப்போது இந்த மோடி அரசு கொண்டாட உள்ளது?  தனது கட்சியின் விளம்பரத்துக்காக அரசுப் பணத்தை செலவழிப்பது அவமானகரமான செயல்” என தெரிவித்துள்ளார்.