பெல்காவி

பெல்காவியில் நேற்று நடந்த லிங்காயத்துக்களின் பிரம்மாண்டமான பேரணி கர்னாடகா மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியது

லிங்காயத்துக்கள் தாங்கள் இந்து மதத்தினர் அல்லர் எனவும் தங்களை தனி மதத்தவர் என அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றனர்.  கர்னாடகா முதல்வர் சித்தராமையா லிங்காயத்துகளை மதம் தனியானது என அறிவித்துள்ளார்.   இது பா ஜ க தலைவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டியது.   பா ஜ க வுக்கு ஆதரவாக இருக்கும் லிங்காயத்துக்களை தன் பக்கம் இழுக்கவே இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை முதல்வர் நிகழ்த்துவதாக மாநில பா ஜ க தலைவர் எடியூரப்பா கூறி உள்ளார்.  அதே போல ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் இது இந்து மதத்தின் உட் பிரச்சினை எனவும் லிங்காயத்துகளும் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே எனவும் கூறினார்.

நேற்று பெல்காவியில் லிங்காயத்துக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.  அதில் பல்லாயிரக்கணக்கான லிங்காயத்துக்கள் கர்னாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து கலந்துக் கொண்டனர்.  இந்தப் பிரிவினரின் மடத்தை சேர்ந்த பல மடாதிபதிகளும் இதில் கலந்துக் கொண்டனர்.  பேரணியில் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இத்தனை நாட்களாக தாங்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவாக இருந்ததால் இந்து மதம் தங்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை என தலைவர்கள் கூறினார்கள்.

மடாதிபதிகளில் ஒருவரான சித்தராம சாமி கூறுகையில், “இந்து மதம் லிங்காயத்திசம் ஆகியவைகளுக்கு அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.  எங்கள் மதம், ஜாதி, வகுப்பு, மற்றும் பாலினத்தின் பெயரால் யாரையும் தாழ்த்தாது.  அனைவரும் சமமே.  எங்களின் மதம் பல கடவுள்களை வணங்குவதை ஊக்குவிப்பது இல்லை.  இந்துமதத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களின் பலன் அடுத்த ஜென்மத்தில் நம்மை வந்து சேரும் என்பதற்கு மாறாக எங்கள் மதத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கான பலன்கள் நமக்கு இந்த பிறவியிலேயே கிடைத்து விடும் என சொல்லப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இதற்கு முன்பு இதே போல ஒரு மாபெரும் பேரணி ஜூலை மாதத்தில் லிங்காயத்துகளால் பிதார் என்னும் இடத்தில் நடைபெற்றது.  தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவும் கிடைத்திருப்பது லிங்காயத்த்துக்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.  ஆனால் சில அரசியல் பார்வையாளர்கள் வரும் 2018 தேர்தலில் லிங்காயத்துக்களின் வாக்கை பெற வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் தான் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என கூறுகின்றனர்.