ஏமாற்றிய லிங்குசாமி.. கைகழுவிய விஷால்!: வசனகர்த்தா புகார்

லிங்குசாமி – விஷால்

‘அஞ்சான்’ படத்தை அடுத்து இயக்குநர் லிங்குசாமி, “சண்டைக்கோழி 2′ படத்தை இயக்கி வருகிறார். விஷால் கதாநாயகனாக நடிப்பதோடு, தயாரிக்கவும் செய்கிறார்.

இந்தப் பட விவகாரத்தில்தான் வசனகர்த்தாவை  சக்கையாக ஏமாற்றிவிட்டார் லிங்குசாமி என்ற புகார் எழுந்திருக்கிறது.

இது குறித்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் சொல்லப்படுவதாவது:

“இந்தப் படத்துக்கான வசனம் எழுதப்பட்ட நிலையில், அவற்றை மதுரை வட்டார மொழியில் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் லிங்குசாமி. இதையடுத்து பி.ஆர்.ஓ.வும் வசனம் எழுதுவதில் நல்ல தேர்ச்சி உடையவருமான வி.கே.சுந்தரை அழைத்து அந்த பொறுப்பை அளித்தார். அவரும் முழுப்படத்துக்கான வசனங்களை, பக்காவாக மதுரை ஸ்லாங்கில் எழுதிக்கொடுத்தார்.

இதற்காக வி.கே. சுந்தருக்கு மூன்று லட்ச ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

ஆனால் பணத்தைத் தராமல் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டார்கள். பொறுத்துப் பார்த்த வி.கே.சுந்தர், லிங்குசாமியை தொடர்ந்து தொடர்புகொண்டு தனக்குரிய பணத்தைக் கேட்டபோது, “மூன்று லட்ச ரூபாய் முடியாது.. ஒரு லட்சம்தான் தர முடியும்” என்றார்.

வி.கே. சுந்தர் அதிர்ச்சி அடைந்தாலும், அதற்கும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் சில்லறை சில்லறையாக ஐம்பதாயிரம் ரூபாய்வரை வி.கே.சுந்தருக்கு கொடுத்ததோடு சரி.

இப்போதோ, “நீங்கள் எழுதிய வசனங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஆகவே உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்ததே அதிகம்” என்று லிங்குசாமி தரப்பில் சொல்லப்பட அதிர்ச்சியில் இருக்கிறார் வசனம் எழுதிய வி.கே. சுந்தர்.

லிங்குசாமியும் ஒரு படைப்பாளிதான். சக படைப்பாளியின் வலி அவருக்குத் தெரியாதா..?” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வி.கே. சுந்தர்

இது குறித்து வி.கே. சுந்தரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “இது குறித்து கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார் லிங்குசாமி. பிறகு அவரது சகோதரர் போஸ், இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் என்றார். கடைசியில்,  என் வசனத்ததை பயன்படுத்தவில்லை என்கிறார்கள்.

ஆனால் முழுதும் என் வசனத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பயன்படுத்தவில்லை என்கிறார் லிங்குசாமி. ஒரு வாதத்துக்காக அப்படி வைத்துக்கொள்வோம். பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் இயக்குநரான லிங்குசாமியின் உரிமை. ஆனால் நான் செய்த பணிக்கு ஒப்புக்கொண்ட ஊதியத்தைத் தர வேண்டுமா இல்லையா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார் வி.கே. சுந்தர்.

மேலும் அவர், “லிங்குசாமியின் தவறான நடவடிக்கை குறித்து, படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான விஷாலிடம் தெரிவித்தேன். அவரோ, “எழுத்து இயக்கம் ஆகியவற்றுக்கு மொத்தமாக ஒரு பேமெண்ட் லிங்குசாமியிடம் கொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு செலவைத்தான் நான் நேரடியாக கவனித்துக்கொள்கிறேன். ஆகவே லிங்குசாமியிடமே பேசுங்கள் என்று சொல்லிவிட்டார்.

ஒரு படைப்பு என்பது சுக அனுபவம் என்றாலும்.. பிரசவ வேதனை போன்றது என்பதும் படைப்பாளியான லிங்குசாமிக்குத் தெரியும். அப்படி இருந்தும் அவர் இப்படி செயல்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது..” என்றார் வேதனையுடன்.

அதே போல, “ஊர் நியாயமெல்லாம் பேசி தேர்தல் களத்தில் இறங்கப்போவதாக அதிரடி காட்டிய விஷால்.. தனது படத்திலேயே நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்காமல், நழுவுவது என்ன நியாயம்” என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.