வங்கி கணக்குடன் ஆதார் கட்டாயம் இணைத்தே தீர வேண்டும்!! ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

டில்லி:

‘‘பண மோசடி தடுப்பு சட்டத்தின் படி வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்’’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுகஅகு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள் மற்றும் புதிய கணக்கு தொடங்குபவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘‘ வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் 1ம் தேதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் கண்டிப்பாக இணைக்க வேண்டும். இனியும், வங்கிகள் காத்திருக்காமல் ஆதார் இணைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.