டில்லி

ருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆதார் எண் குறித்து பல வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அனைத்தையும் அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அந்த அமர்வின் விசாரணை முடிந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஆதார் என்பது சட்டப்படி செல்லுபடி ஆகும் ஒரு ஆவணம் எனவும் அதே நேரத்தில் அரசின் பல திட்டங்களுக்கு, தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு அவசியம் இல்லை எனவும் உத்தரவிட்டது.

கடந்த 2018-19 ஆம் வருடத்துக்கான வருமான வரி கணக்கை ஸ்ரியா சென் மறும் ஜெயஸ்ரீ சத்புதே ஆகியோர் ஆதார் எண்ணை இணைக்காமல் தாக்கல் செய்தனர். பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு அவசியம் இல்லை எனவும் இந்த கணக்கை ஒப்புக் கொள்ள வேண்டும் எனவும் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை ஏ கே சிக்ரி மற்றும் அப்துல் நசிர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் ”தற்போது நீதிமன்ற பரிசீலனையில் உள்ள இந்த மனுவில் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க தேவை இல்லை என டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதே நேரத்தில் வருமான வரிச் சட்டம் 139 ஏ வின் படி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். கணக்கு அளிக்க கொடுத்த கால அவகாசம் முடிந்த பிறகு இந்த கணக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் ஆன்லைனில் வரிக்கணக்கை தாக்கல் செய்யும் போது ஆதாரை இணைக்க வசதி இல்லை என்று தான் தெரிவித்துள்ளனர். ஆகவே வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என்பதை அவர்களே உறுதிப்படுத்தி உள்ளனர் அதனால் வருமான வரி கணக்குக்கு பான் எண்ணுடன் ஆதார் என்ணை இணைப்பது அவசியம் என உறுதி செய்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ள்து.