ஃபிஃபா 2018ல் அர்ஜெண்டினா தோல்வி: தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு கேரளா ரசிகர் மாயம்

திருவனந்தபுரம்:

உலககோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் குரோஷியா அணியிடம் அர்ஜெண்டினா அணி 3:0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

அர்ஜெண்டினாவில் தோல்வி உலகம் முழுவதும் உள்ள லயனல் மெஸ்ஸி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வகையில் கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பினு அலெக்ஸ் என்ற ரசிகரும் அதிர்ச்சியடைந்தார். மனவேதனையுடன் காணப்பட்ட அவர் திடீரென மாயமாகிவிட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்தவிட்டுச் சென்றுள்ளார்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அருமானூரில் உள்ள மீனாச்சில் ஆற்றில் போலீசார் நீந்தி தேடினர். எனினும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. அவர் இன்னும் வீடு திரும்பவில்லை.

மெஸ்ஸியின் தீவிர ரசிகரான அலெக்ஸ் தனது செல்போனில் அவரது புகைப்படத்தை வைத்திருந்தார். அதோடு நேற்று அர்ஜெண்டினா போட்டியை முன்னிட்டு மெஸ்ஸி படம் பொறித்த டி சர்ட் ஒன்றை புதிதாக வாங்கி அணிந்திருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.