புதுடெல்லி:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் நேற்று முதல் சில கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.


ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் கடைகள் முன் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிக்கவில்லை.

இந்நிலையில், டெல்லியில் மதுவுக்கு சிறப்பு கொரோனா கட்டணமாக, அதன் எம்.ஆர்.பி., விலையிலிருந்து 70 சதவீதம் வரி விதித்து மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மதுவுக்கு சிறப்பு கொரோனா கட்டணமாக 70 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மது விலை கணிசமாக உயரும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.