குழந்தை பிறப்பதற்கே தகுதியில்லாத, ஆபத்தான நாடுகளின் பட்டியலை யூனிசெப்   வெளியிட்டுள்ளது.

பிறந்து 28 நாட்களுக்குள் மரணமடையும் குழந்தைகள் விகிதத்தை, நாடுகள் வாரியாக யூனிசெப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்து நிறைந்த நாடாக பாகிஸ்தான்  இருக்கிறது. 2016ஆம் வருட ஆய்வுப்படி இங்கு ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 46.5 குழந்தைகள் சராசரியாக மரணிக்கின்றன. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவற்றிலும் பாகிஸ்தானைப் போன்ற நிலையே உள்ளது.

கீழ்-நடுத்தர வருமானம் ஈட்டும் இந்தியா உள்ளிட்ட 52 நாடுகளில், இந்தியா 12 வது இடத்தில் இருக்கிறது.  இங்கு ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளிலும் 25.4 குழந்தைகள் மரணிக்கின்றன.

பாதுகாப்பாக குழந்தைகள் பிறக்கும் மற்றும் வளரும் நாடுகளில் ஜப்பான், ஐஸ்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தில் இருக்கின்றன. இங்கு பிறக்கும்  குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

வருடந்தோறும் உலகில் 26 லட்சம் குழந்தைகள், பிறந்த சில நாட்களில் மரணிக்கின்றன. . இந்த மரணங்கள் அனைத்தும் எளிதில் தவிர்க்கக்கூடிய நிலையில் இருந்தும் நிகழ்கின்றன என்று யுனிசெப்  அறிக்கை தெரிவிக்கிறது.

முறையான மருத்துவ வசதியில்லாமை, நிமோனியா மாதிரியான தொற்றுநோய்கள், பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றால்  மரணங்கள் நிகழ்கின்றன என்றும், இவற்றை சுலபமாக தடுக்க இயலும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.