நீட், ஜேஇஇ தேர்வு விவகாரம்: அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நல்ல தீர்வை காணவேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடக்கிறது. ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27ம் தேதியும் நடைபெறுகிறது.

கொரோன தொற்று காலத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் கூறி வருகின்றனர்.

இந் நிலையில், நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நல்ல தீர்வை காணவேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: நீட், ஜேஇஇ தேர்வினை எதிர்கொள்ள உள்ளவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள். கொரோனா தொற்று பயம், தொற்றுநோய்களின் போது போக்குவரத்து மற்றும் உறைவிடம், அசாம் & பீகாரில் வெள்ளம், சகதி என அவர்களுக்கு உண்மையான கவலைகள் இருக்கின்றன.

ஆகையால் அனைவரின் கோரிக்கைகளையும் செவிசாய்த்து ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை மத்திய அரசு காண வேண்டும் என்று டுவிட்டர் பதிவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.