Random image

புத்த கயாவில் மீண்டும் வெடிகுண்டு : மக்கள் பீதி

யா

புத்தகயாவில் ஒரு பொதுக் கழிப்பறையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புத்தர் ஞானம் பெற்ற இடம் புத்த கயா.  இங்குள்ள ஒரு போதி மரத்தின் அடியில் தியானம் செய்துக் கொண்டிருந்த போது அவருக்கு ஞானம் கிடைத்தது.   அதனால் அந்த போதி மரம் உள்ள இடம் தற்போது கோவில் ஆக்கப்பட்டுள்ளது.  இந்த இடம் தற்போது யுனெஸ்கோவால் புராதன இடம் என அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகிறது.    இந்த நகரமே முழு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி இந்த போதிமரத்துக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு ஆண்கள் கழிப்பறையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.   அப்போது அங்கு புத்த மத தலைவர் தலாய் லாமா சுற்றுப்பயணம் செய்துக் கொண்டிருந்த படியால் இந்த விவகாரம் கடும் பரபரப்புக்கு உள்ளாகியது.   அதன் பிறகு அந்த வெடிகுண்டு செயலிழக்கம் செய்யப்பட்டது.

தற்போது அதே வளாகத்தில் மீண்டும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டுள்ளது.   இது நாட்டு வெடிகுண்டு என கூறப்படுகிறது.     வரும் அக்டோபர் 1 முதல் இந்தப் பகுதிக்கு உலகெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வரும் நேரம் என்பதால் இது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த வெடிகுண்டு கழிவறைக்கு மிகவும் வெளிப் பகுதியில் இருந்துள்ளது.   உடனடியாக வெடிக்கும் நிலையில் இந்த குண்டு இல்லை.  ஆயினும் இந்த குண்டு நிரஞ்சனா நதிக்கரையில் அழிக்கப்பட்டு விட்டது.    இந்த குண்டு வைத்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த திலாவர் ஹுசைன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இங்கு அழைத்து வந்து விசாரித்ததில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.   உபயோகப்படுத்தாத ஒரு கழிப்பறையின் நீர் தொட்டியில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது.    ஹுசைன் கடந்த ஜனவரி மாதம் தாம் குண்டு வைத்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.   அவர் கொடுத்த தகவலினால் வங்க தேசத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.