டில்லி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
வாழு, வாழ விடு என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட முடியும் என்பதை திங்கட்கிழமை தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்புபடி தமிழக பாசனத்துக்காக 50 டிஎம்சி தண்ணீர்  திறந்து விடப்பட வேண்டும். ஆனால், கர்நாடகா இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து, காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரி தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இன்று இன்த விசாரணைக்கு வந்தது. கர்நாடக வழக்கறிஞர், “கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை. எங்கள் மாநிலத்தின் பெங்களுர், மைசூர், மாண்டியா மாவட்ட குடிநீர் தேவைக்காக 40 டிஎம்சி தண்ணீர் தேவை.  அணையில் 51 டிஎம்சிக்கும் குறைவாக தண்ணீரே இருப்பு உள்ளது.  ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது” என்று கூறினார்.
a
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
“காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம் கொடுத்துள்ள தீர்ப்பை நீங்கள் பொருட்படுத்தவில்லை.  தமிழகத்துக்கு தரும் தண்ணீர் பற்றி  கவலை இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. நடுவர் மன்றம் தீர்மானித்த முறைப்படி தண்ணீர் தருவது அவசியம். அதை எப்படி மீற முடியும்.
தண்ணீர் திறந்துவிடுவதில் உங்களுக்கு பிரச்சினை இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்.   “வாழு வாழவிடு என்கிற கோட்பாட்டை மதியுங்கள்” என்று கடுமையான அறிவுரையும் கர்நாடகத்துக்கு வழங்கினர்.
இதற்கிடையே, கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில்  இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.