நீதிமன்ற நடவடிக்கையை நேரடி ஒளிரப்பு செய்ய வழிகாட்டு நெறிமுறை….உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

டில்லி:

நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான எழுத்துப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வக்கீல் வேணுகோபால் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் கூறுகையில்,‘‘ நேரடி ஒளிபரப்பு என்பது வெள்ளோட்டமாக முதலில் நம்பர் ஒன் நீதிமன்றத்தில் அமல்படுத்தப்படும். அதோடு குறிப்பிட்ட வழக்கு விசாரணைகள் மட்டுமே இதில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்’’ என்றார். மேலும் மனுதாரர்கள், செய்தியாளர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள், வக்கீல்கள் நேரடி ஒளிபரப்பை பார்வையிடும் வகையில் மீடியா அறை ஏற்படுத்தப்படும்.

நீதிமன்ற அறையில் நெருக்கடியை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். மொழியாக்க வசதிகள் மற்றும் ஆடியோ, வீடியோ பதிவுகளும் மேற்கெள்ளப்படும். இதை மக்கள் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும். சட்ட மாணவர்களும் பயன்பெற ஏற்பாடுகள் செய்யப்படும். நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு முடிவை சம்மந்தப்பட்ட நீதிமன்றமே முடிவு செய்து கொள்ளலாம். இதற்கு கட்டுப்பாடுகள் தேவை என்றால் அதையும் அமல்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமண வழக்குகள், சிறுவர்கள் நலன் சார்ந்த வழக்குகள், பாதிக்கப்பட்டவர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டிய வழக்குகள், தேசிய பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்க கூடிய வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகளுக்கு நேரடி ஒளிபரப்பில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.