12 முதல் 18 மாதங்களுக்கு கொரோனா வைரசுடன் வாழவேண்டி இருக்கும் : நாராயணமூர்த்தி 

--

பெங்களூரு :

 

தினமும் 1 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தினாலும் இந்தியாவில் அனைவருக்கும் பரிசோதனை செய்து முடிக்க 37 வருடங்கள் ஆகும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியிருக்கிறார்.

அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்தியர்கள் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், அனைத்து நிறுவனங்களும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். மேலும்  பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இந்தியர்கள் அதிக நேரம்  மற்றும் அதிக வேலை செய்ய  வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் பணியிடங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இந்திய பொருளாதார நிலை குறித்தும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியிடம் எகனாமிக் டைம்ஸ் நடத்திய  கலந்துரையாடலில் இவ்வாறு கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் நிறுவனங்கள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று   கூறினார்.

தற்போதைய சான்றுகளின் அடிப்படையில், வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பதால், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கவுன், கையுறைகள், முகமூடிகள் மற்றும் கண்ணாடிகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை வழங்குவதன் மூலம் ஏற்பட கூடிய செலவினங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு  சிறந்த முறையில்  எவ்வாறு பாதுகாப்பு வழங்க  முடியும் என்பதைக் கண்டறிய  வேண்டும்.

“சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒன்று அல்லது இரண்டு ஷிப்ட் இயங்கும் நிறுவனங்கள் மூன்று ஷிப்ட் வரை இயக்கவும். குறைந்த ஆபத்துள்ள ஊழியர்கள் கவுன், முகமூடிகள், கையுறைகள், கண்ணாடிகளைப் பயன்படுத்தி தொழிற்சாலை பணியில் கலந்துகொள்ளலாம்.  வயதானவர்கள் வீட்டிலிருந்தோ அல்லது தங்கள் சொந்த அலுவலகங்களிலிருந்தோ வேலை செய்ய” தான் பரிந்துரைப்பதாக நாராயணமூர்த்தி கூறினார்.

இந்தியாவில் சோதனை திறன் குறித்து கருத்து தெரிவித்த மூர்த்தி, இந்தியா ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேரை பரிசோதித்தாலும், அனைவரையும் சோதிக்க 37 ஆண்டுகள் ஆகும் என்று கூறினார். கொரோனா வைரசுக்கான தடுப்பூசி எப்பொழுது வருமென்று தெரியவில்லை என்று அவர் மேலும் கூறினார், எதிர்காலத்தில் தடுப்பூசி வந்தாலும் அது எப்படி வேலை செய்யும் அல்லது இந்திய மரபணுக்களில் எப்படி வேலை செய்யும் என்பது நமக்கு தெரியாது என்று சுட்டிக்காட்டினார். இந்த சூழ்நிலையில், அடுத்த 12-18 மாதங்களுக்கு கொரோனா வைரசுடன் வாழ இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.

கொரோனா வைரஸின் விளைவாக ஏற்பட்டுள்ள  பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற, இந்தியர்கள் கடினமாக நீண்ட காலத்திற்கு  பணியாற்ற சபதம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

“அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு பத்து மணிநேரம், வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்வோம் என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும், இதனால் பொருளாதாரத்தை மிக விரைவாக சீர்செய்ய முடியும். அரசு தரப்பில் 1991 ம் ஆண்டு நடந்த பொருளாதார சீர்திருத்தங்களை போல், வணிகங்கள் நடைபெறுவதற்கு இடையூறாக இருக்கக்கூடிய சரத்துகளை மாற்றியமைக்க தேவையான திறமையான நபர்களை கொண்ட ஒரு  குழுவை நியமிக்க வேண்டும். இந்த இரண்டையும் நாம் ஒருசேர செய்தால் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வலுப்பெற முடியும்” என்றார்.

சிறு குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் அரசு தாராளமாக நிதியுதவி உடனடியாக அளிக்க வேண்டும். அதுபோல், வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை பல்வேறு சீர்திருத்தங்களுடன், முழுமையாக செயல்படுத்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நன்றி : தி எகனாமிக் டைம்ஸ்