வேளாண் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது…..வெங்கைய நாயுடு

மும்பை:

கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது என்று துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே வைகுந்தமேத்தா தேசிய கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் நடந்த தேசிய வேளாண் ஆலோசனை கூட்டத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பேசுகையில், ‘‘ வேளாண் கடன் தள்ளுபடி என்பது நிரந்தர தீர்வு கிடையாது. இது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தற்காலிக தீர்வை தான் ஏற்படுத்தும். ஒரு முறை கடனை தள்ளுபடி செய்துவிடலாம். அடுத்த முறைக்கு என்ன செய்வது?. கடன் தள்ளுபடி என்பது அரசியல் கோரிக்கையாக தான் உள்ளது.

சுய மரியாதை உள்ள விவசாயிகளிடம் இருந்து கடன் தள்ளுபடி என்ற கோரிக்கை வராது. பெரும்பாலான விவசாயிகள் கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்திய வரலாறு தான் உள்ளது. அவர்கள் கடன் தள்ளுபடி வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். விவசாய மேம்பாட்டை தான் அவர்கள் வலியுறுத்தினர். அரசின் கொள்கைள் விவசாயிகள் நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும். அவை விவசாயிகள் காணும் வகையில் செயல்படுத்த வேண்டும். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டிலேயே உணவு உற்பத்தி பாதுகாப்பு அவசியமாகிறது’’ என்றார்.

விழாவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசுகையில், ‘‘வேளாண் துறையில் அரசின் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தை தொடர்புள்ள விவசாய பொருட்களை உற்பத்தி செய்வது தான் பெரிய சவாலாக உள்ளது. குடோன்கள் முழுவதும் வேளாண் விளை பொருட்கள் உள்ளது. அதை எப்படி விற்பனை செய்வது? என்பது தான் தெரியவில்லை’’ என்றார்.

விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், வேளாண் விஞ்ஞாணி எம்,எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.