மோடியின் முத்ரா திட்டத்தில் ரூ. 11000 கோடி வாராக்கடன் : அதிர்ச்சி தகவல்

டில்லி

மோடி சிறு தொழில் முனைவோருக்காக அறிவித்த முத்ரா திட்டத்தில் அளிக்கப்பட்ட கடன்களில் ரூ. 11000 கோடி வாராக் கடன் ஆகி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மோடி சிறிய மற்றும் குறு தொழில் புரிவோர் நலனுக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்னும் திட்டத்தை தொடங்கினார்   இந்த திட்டத்தின் படி சிறு மற்றும் குறு தொழில் புரிவோர் தொழில் தொடங்க வங்கிகள் ரூ. 1 லட்சம் வரை கடன் கொடுத்தன. இந்த திட்டம் மோடி அரசின் வெற்றித் திட்டமாக இன்று வரை பாஜகவினரால் புகழப்பட்டு வருகிறது. இந்த கடன் திட்டத்தினால் சுமார் 7.28 கோடி பேர் பயன் அடைந்துள்ளதாக பாஜக தலைவர் அமித்ஷா கூறி உள்ளார்.

இந்த திட்டம் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அளித்த மனுவின் கீழ் வந்துள்ள தகவலின்படி ”இந்த திட்டத்தின் கீழ் சுமார் 13.47 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 6.37 லட்சம் கோடி கடனாக அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.50000 லிருந்து ரூ. 1 லட்சம் வரை கடன் அளிக்கப்பட்டுளது. அதில் ரூ.10,915.07 கோடி வாராக்கடனாக உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அளிக்கப்பட்ட கடன்கள் வாராக்கடன்கள் ஆனதற்கு பொருளாதார நிபுணர்கள் இரு காரணங்களை தெரிவிக்கின்றனர். அதில் ஒன்று இந்தக் கடன்களுக்கு ஈடாக எதுவும் பெறப்படவில்லை. ஆகவே கடனை செலுத்தாதவர்களிடம் இருந்து வசூலிக்க வழியே இல்லை. அடுத்த காரணம் ஒவ்வொரு வங்கிக்கும் இத்தனை கடன் கொடுத்தாக வேண்டும் என குறியீடு வைத்ததாகும். அந்தக் குறியீட்டை எட்ட வங்கிகள் சரியாக பரிசீலனை செய்யாமல் பலருக்கு கடன்களை அளித்துள்ளது.

இது குறித்து ஆர்வலர் தேவிந்தர் சர்மா, “முன்பு இதே போல் கடன் அளிக்கும் திட்டத்தை அரியானா முதல்வர் தேவிலால் தொடங்கி வைத்தார். அதில் பெரும்பாலான கடன்கள் ஈடு எதிவும் இல்லாமல் கொடுக்கப்பட்டதால் திரும்பி வராமல் போய் விட்டது. அவ்வகையில் லட்சக்கணக்கான கடன்கள் வாராக்கடன் ஆகியது” என தெரிவித்துள்ளார்.