பெங்களுரு,

ர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தற்போது சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இன்று இறுதிநாள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று உரையாற்றினார்.

அப்போது, வறட்சி பாதித்த பகுதிகளுக்கு செல்லும் போதெல்லாம், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்னிடம் வலியுறுத்தினர். அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நேற்று(20.6.17) வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற குறுகிய கால கடன், பயிர் கடன் ஆகியவற்றில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

இதன் மூலம் 22 லட்சத்து, 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு ரூ.8,165 கோடி அதிக சுமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்  மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்தார்.