டில்லி:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இன்றைய விசாரணையின்போது, வரும் அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது.  அதன் பதவிக் காலம்,  2016ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்குகள் காரணமாக, தேர்தல் தள்ளிப்போனது.

இதையடுத்து தேர்தலை உடனே நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அசராத தமிழக அரசு, பல்வேறு காரணங்களை கூறி அவகாசம் வாங்கி வருகிறது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. அப்போது தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வார்டு வரையறை செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், அதன் காரணமாக,  உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் தேவை என கோரியது.

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை ஏற்ற உச்சநீதி மன்றத்தில், அக்டோபரில் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.