விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் சூசக தகவல்

சென்னை:

மிழகத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், விடுபட்ட  9 மாவட்டங்களுக்கு ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சென்னை ராயப்பேட்டையில் இன்று நடைபெற்ற  அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் சூசகமாக கூறினார்.

இதன் காரணமாக, தமிழகத்தில் விடுபட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் பள்ளி முழு ஆண்டு விடுமுறை நாட்களான ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமை சார்பில் 4 நாட்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்றுமுதல் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று முதல்கட்டமாக 7 மாவட்ட செயலாளர்கள், நகராட்சி செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு கரூா், தஞ்சாவூா் வடக்கு, தஞ்சாவூா் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூா், புதுக்கோட்டை, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4.30 மணி முதல் மதுரை மாநகா், மதுரை புகா் கிழக்கு, புகா் மேற்கு, திண்டுக்கல், விருதுநகா், திருச்சி மாநகா், புகா் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து  ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரவிருக்கும் நகராட்சி மாநகராட்சி தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றுவது குறித்தும், கட்சி பலவீனமாக உள்ளதாக கூறப்படும் பகுதிகளை கண்டறிந்து பலப்படுத்துவது, அரசின் திட்டங்களை சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் மாத இறுதியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்பதால் நிர்வாகிகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்போதே ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கும் சேர்த்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல்வரின் சூசகமான பேச்சு, ஏப்ரல் இறுதியில் விடுபட்ட மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து  நாளை, 11-ஆம் தேதி  காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, கடலூா் கிழக்கு, மத்திய, மேற்கு, திருவள்ளூா் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

12ந்தேதி   காலை 10 மணிக்கு தேனி, அரியலூா், தருமபுரி, கோவை மாநகா், புகா், திருப்பூா் புகா், மாநகா், மாலை 4.30 மணிக்கு சேலம் மாநகா், புகா், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, ஈரோடு மாநகா், புகா் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடனும் ஆலோசனை , 13-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாநகா், புகா், காஞ்சிபுரம் கிழக்கு, மத்தியம், மேற்கு, வேலூா் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடனும், மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் வடக்கு, தெற்கு, சென்னை மாவட்டம் முழுவதற்கும் ஆலோசனை நடத்தப்படும் என்று அதிமுக ஏற்கனவே  அறிவித்திருந்தது.

கார்ட்டூன் கேலரி