டிசம்பர் 27, 28ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரையாண்டு தேர்வு விடுமுறை காலமான டிசம்பர் 27ந்தேதி மற்றும் 28ந்தேதி  நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தமிழகஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அரையாண்டு விடுமுறை காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு என்று பத்திரிகை.காம் இணையதளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தமிழக தேர்தல் ஆணையமும், இந்த செய்தியை ஊர்ஜிதம் படத்தும் விதமாக தேதிகளை பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால், மத்தியஅரசும், உள்ளாட்சிகளுக்கு வழங்கும் நிதியை தராமல் இருந்து வருகிறது. இதனால், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ளது.

இதுதொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள்  உள்ளாட்சி துறை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழகஅரசு உறுதி அளித்தது. அதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே இதுதொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம், மாவட்ட ஆட்சியாளர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, நேற்று, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசுத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன்  சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்திலும் ஆலோசனை நடைபெற்றது. இதன் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் தேதி எந்நேரமும் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், டிசம்பர் மாதம் 27, 28ந்தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு  அரையாண்டு டிசம்பர் 23ந்தேதி முடிவடைந்து ஒரு வாரம் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலங்களில், பள்ளிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தினால், யாருக்கும் தொல்லை இருக்காது என்பதால், அந்த நாட்களில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.